டாஸ்மாக் குடோனுக்கு வந்த லாரியில் மதுபாட்டில்கள் திருடிய 2 பேர் கைது

Ganja Crime | Today Theni News
X

பைல் படம்.

டாஸ்மாக் குடோனுக்கு வந்த லாரியில் மதுபாட்டில்கள் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவண்ணாமலையை அடுத்த கண்ணக்கருக்கை ஊராட்சியில் தமிழ்நாடு அரசு வாணிபக் கிடங்கு உள்ளது. சென்னையிலிருந்து ஏற்றி வரப்படும் மதுபாட்டில்கள் இந்தக் கிடங்கில் இறக்கி வைக்கப்பட்டு பல்வேறு டாஸ்மாக் கடைகளுக்கு மதுபாட்டில்கள் அனுப்பப்பட்டு வருகிறது.

கடந்த 9-ந் தேதி சென்னையில் இருந்து டாஸ்மாக் மதுபான பாட்டில்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வந்தது. மதுபாட்டில்களை இறக்குவதற்காக லாரியை அங்கு நிறுத்தி வைத்துவிட்டு கிடங்கு மேலாளரிடம் தகவல் தெரிவித்து டிரைவர் சென்று விட்டார். மறுநாள் காலை டிரைவர் வந்து பார்த்தபோது லாரியில் இருந்து தார்ப்பாயை அறுத்து மதுபாட்டில்களுடன் 7 பெட்டிகள் திருடப்பட்டிருந்தன. இது குறித்து கிடங்கு மேலாளரிடம் டிரைவர் தகவல் அளித்தார்.

அதன்அடிப்படையில் கிடங்கு மேலாளர் செந்தில்குமார் தண்டராம்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்த போலீசார் கிடங்கு பகுதியில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர். 3 வாலிபர்கள் மதில் சுவர் மீது ஏறி குதித்து மதுபாட்டில்களை எடுத்துச் செல்வது பதிவாகியிருந்தது. இதை வைத்து விசாரித்து வந்தனர்.

இந்த நிலையில் செட்டிபட்டு கிராமபகுதியில் குறைந்த விலையில் மதுபாட்டில்கள் விற்பதாக தண்டராம்பட்டு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து போலீசார் செட்டிப்பட்டு பகுதிக்கு விரைந்தனர். அப்போது அங்கு மதுபாட்டில்களை விற்றுக்கொண்டிருந்த 3 பேரும் போலீசாரை பார்த்து தப்பி ஓடினர். அதில் 2 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர்.

விசாரணையில் அவர்கள் பெயர் சுதாகர் (வயது 24), நல்லவன்பாளையம் லட்சுமணன் (30) என்பதும் தப்பி ஓடியவர் அருள்குமார் என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து சுதாகர், லட்சுமணனை போலீசார் கைது செய்து அருள்குமாரை தேடி வருகின்றனர். குடிப்பதற்கு பணம் இல்லாததால் அருகிலுள்ள குடோன்களில் திருடினோம் என 2 பேரும் தெரிவித்தனர்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil