திருவண்ணாமலை; கடந்த 24 மணி நேரத்தில் சாலை விபத்துகளில் 6 பேர் பலி

திருவண்ணாமலையில் நடந்த இரண்டு விபத்துகளில், 6 பேர் உயிரிழந்தனர். ( மாதிரி படம்)
திருவண்ணாமலை அருகே வெறையூரில் பைக் மீது அரசு விரைவு பஸ் மோதியதில், பெண்கள் உள்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
வெறையூர் அருகே உள்ள பெரியகல்லப்பாடிபுதூர் பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 29). அதே பகுதியை சேர்ந்த துரை மனைவி சித்ரா (24), விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகே உள்ள கொடுக்கப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கம் மனைவி இந்திரா (44) ஆகியோர் இவரது உறவினர்கள்.
பெரியகல்லப்பாடியில் உள்ள இவர்களது உறவினர் இறந்ததையொட்டி துக்கம் விசாரிக்க இந்திரா வந்திருந்தார். அவரையும் சித்ராவையும் தனது பைக்கில் ஏற்றிக்கொண்டு, பெரியகல்லப்பாடிக்கு விக்னேஷ் புறப்பட்டார்.
வெறையூர் பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது, வேலூரிலிருந்து திருவனந்தபுரத்துக்கு சென்ற அரசு விரைவு பஸ் இவர்கள் சென்ற பைக் மீது பயங்கரமாக மோதியது. இதில் இந்திரா அந்த இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயம் அடைந்த சித்ரா, விக்னேஷ் ஆகிய இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர்கள் இறந்தனர். இது குறித்து வெறையூர் இன்ஸ்பெக்டர் செல்வநாயகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
சாத்தனூர்
திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் கிராமத்தை சேர்ந்தவர் காமாட்சி (வயது 40). இவரது மகன் சக்திவேல் (15). சக்திவேலுக்கு உடல்நிலை சரியில்லாததால், திருவண்ணாமலை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இன்று காலை மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு திரும்பினார். காரில் சக்திவேல், காமாட்சி, செல்வம் (42), சஞ்சய் (13) ஆகியோர் சென்றனர். காரை இளையராஜா (28) ஓட்டினார். கோளாப்பாடி அருகே கார் சென்ற போது, கோயம்புத்தூரிலிருந்து சென்னை நோக்கி சென்ற லாரியும்-காரும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இதில் இடிபாடுகளுக்குள் சிக்கி காரில் பயணம் செய்த சக்திவேல், காமாட்சி இளையராஜா ஆகிய 3 பேரும் அந்த இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
செல்வம், சஞ்சய் ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர். அவர்கள் திருவண்ணாமலை மருத்துவக்கல்லூரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து திருவண்ணாமலை தாலூகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நேற்று இரவு மற்றும் இன்று காலையில் ஏற்பட்ட இருவேறு விபத்துகளில் அடுத்தடுத்து 6 பேர் உயிரிழந்திருப்பது திருவண்ணாமலை சுற்றுவட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu