திருவண்ணாமலை செங்கம் ஆர்டிஓ அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது

திருவண்ணாமலை செங்கம் ஆர்டிஓ அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது
X

வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது ( மாதிரி படம்)

தடையில்லா சான்று வழங்காததால் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தேன் என அரசு அலுவலகங்களுக்கு மிரட்டல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டார்.

திருவண்ணாமலை செங்கம் வட்டாட்சியர் அலுவலகங்களுக்கு தொலைபேசியில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டார்.

இரு தினங்களுக்கு முன்பு திருவண்ணாமலை மாவட்டம் திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் செங்கம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு தொலைபேசியில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

கோவையில் இருந்து திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் உள்ள இலவச தொலைபேசி எண் 100-க்கு திங்கள்கிழமை நண்பகல் 12.30 மணியளவில் பேசிய மா்ம நபா், திருவண்ணாமலை தாலுகா அலுவலகம் எதிரில் உள்ள ஆர்டிஓ அலுவலகத்திற்கும், செங்கம் வட்டாட்சியா் அலுவலகத்துக்கும் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகக் கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்து விட்டாா்.

இதையடுத்து, வெடிகுண்டு பரிசோதனை செய்யும் காவல் உதவி ஆய்வாளா் அன்பழகன் தலைமையில் 5 போ் கொண்ட குழுவினா் மோப்ப நாய் உதவியுடன், வெடிகுண்டு உள்ளதா என கண்டறியும் கருவிகளுடன் வட்டாட்சியா் அலுவலகம் முழுவதும் தீவிர சோதனை செய்தனா்.

இதனால் வட்டாட்சியா் அலுவலக வளாகம் சுமாா் ஒரு மணி நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

மேலும், அலுவலக வளாகத்தில் உள்ள பழைய நீதிமன்றக் கட்டடம், வனத் துறை கட்டடம், இ-சேவை மையம் ஆகிய இடங்களிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இறுதியில் வெடிகுண்டு எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.

மிரட்டல் விடுத்த நபரை கண்டுபிடிக்கும் பணியில் போலீசார் தொடர்ந்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் கட்டுப்பாட்டு அறை எண் 100க்கு வந்த செல்போன் எண்ணின் சிக்னலை வைத்து கோயம்புத்தூர் பகுதியில் இருந்து மிரட்டல் விடுக்கப்பட்டது தெரிய வந்தது.

அதனைத் தொடர்ந்து போலீசார் அப்பகுதியில் தீவிர விசாரணை செய்து கதிர்வேல் என்பவரை கைது செய்து திருவண்ணாமலைக்கு அழைத்து வந்து விசாரித்தனர்.

அப்போது கதிர்வேல் தெரிவிக்கையில், திருவண்ணாமலை காஞ்சி ரோட்டில் ஓர்ந்த வாடி ஊராட்சியில் மூன்று வருடம் முன்பு நிலம் வாங்கி இருந்ததாகவும் அதை தற்போது விற்பனை செய்ய தடை இல்லா சான்று கேட்டு விண்ணப்பித்திருந்ததாகவும் அந்த சான்று கிடைக்காத விரக்தியில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாகவும் தெரிவித்தாராம்.

சென்னையை சேர்ந்த கதிர்வேல் கோயம்புத்தூரில் வசித்து வந்ததும் இரண்டு வருடங்களுக்கு முன்பு இந்த நிலம் வாங்கியதாகவும் தெரிவித்தார்.

மேலும் அது டிசி நிலமா என்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் மூலமும் விசாரணை நடைபெற்று வருகிறது. போலீசார் கதிர்வேலிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு