திருவண்ணாமலை நான்கு வழி சாலை பணிகள் தீவிரம்; ஆக்கிரமிப்புகள் அகற்றம்

திருவண்ணாமலை நான்கு வழி சாலை பணிகள் தீவிரம்; ஆக்கிரமிப்புகள் அகற்றம்

சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்ட நெடுஞ்சாலை துறை அதிகாரிகள்

திருவண்ணாமலை பகுதியில் நான்கு வழி சாலை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதால் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.

திருவண்ணாமலை - கள்ளக்குறிச்சி இடையே தமிழக முதல்வரின் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.121 கோடியில் இரு வழிச்சாலையை நான்கு வழிச் சாலையாக அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணிக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன.

ஆன்மீக நகரமான திருவண்ணாமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் அதிகளவில் ஏற்படுகின்றது. இதனை கருத்தில் கொண்டு சாலைகள் அகலப்படுத்தப்பட்டு வருகின்றன.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு மணலூர்பேட்டை சாலையில் ரோட்டை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த தடை வீடுகள் அகற்றப்பட்டன . தொடர்ந்து திருக்கோவிலூர் ரோடு, வேட்டவலம் ரோடு, போளூர் ரோடு ஆகிய பகுதிகளில் சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

மேலும் தண்டராம்பட்டு ரோடில் ஆக்கிரமிப்புகள் இடித்து தள்ளப்பட்டன ,அதேபோல் தேனி மலையில் கடை மற்றும் வீடுகள் இடித்துச் செல்லப்பட்டன.

இந்நிலையில் தற்போது திருவண்ணாமலையிலிருந்து கள்ளக்குறிச்சி வரை நான்கு வழி சாலை அமைக்கப்படுவதால் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி அதிரடியாக தொடங்கப்பட்டுள்ளது.

இதன் முதற்கட்டமாக திருவண்ணாமலை காமராஜர் சிலையிலிருந்து செட்டிபட்டி வரை அதாவது ஆறு கிலோமீட்டர் தூரத்திற்கான சாலை நான்கு வழி சாலையாக மாற்றும் பணி தொடங்கி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது . இதற்காக முதற்கட்டமாக ரூபாய் 60 கோடி செலவிடப்படுகிறது.

இந்தப் பணிக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன. அதன்படி, நெடுஞ்சாலைத் துறையின் திருவண்ணாமலை கோட்டப் பொறியாளா் ஞானவேல் தலைமையில் உதவி கோட்டப் பொறியாளா் அன்பரசு மேற்பாா்வையில், உதவிப் பொறியாளா் செல்வகணேஷ் மற்றும் சாலை ஆய்வாளா்கள், சாலைப் பணியாளா்கள் அடங்கிய குழுவினா் வாழவச்சனூா் கிராமத்தில் இருந்த சாலையோர ஆக்கிரமிப்பு வீடுகள், கடைகள், மரங்களை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றும் பணியில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா். இந்தப் பணி மேலும் சில தினங்களுக்கு தொடரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

மேலும் அதிகாரிகள் தெரிவிக்கையில் புதிய சாலை அமைக்கப்படும் வேண்டுமென்றால் பழைய தார் சாலையை அகற்றி அதே உயரத்திற்கு புதிய சாலை அமைக்கப்பட வேண்டும் என்பது விதியாகும் . இதனால் பழைய தார் சாலைகள் நவீன இயந்திரம் மூலம் அகற்றப்பட்டன .இந்த இயந்திரம் ஒரே நேரத்தில் தார் சாலையை சுரண்டி அதன் துகள்களை அரைத்து லாரியில் கொட்டுகிறது. இதனால் நேரம் மிச்சமாவது மட்டுமின்றி அகற்றப்பட்ட கார் துகள்கள் வேறு பணிகளுக்கு மறுசுழற்சிக்கு பயன்படுத்தப்படும் என்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story