தற்கொலைக்கு முயன்ற விவசாயி உள்ளிட்ட திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற விவசாயி.
தனியார் விதை கம்பெனியிடம் வாங்கிய பருத்தி விதை தரமற்ற முறையில் இருப்பதாக வேளாண் துறை அதிகாரியிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத விரக்தியில் விவசாயி விஷம் குடித்து தற்கொலை முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி ராமஜெயம். இவர் கிருஷ்ணாபுரம் பகுதியில் இரண்டரை ஏக்கர் விவசாய நிலத்தில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு பருத்தி சாகுபடி செய்துள்ளார்.
ஆத்தூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு விதைகள் உற்பத்தி நிலைய அதிகாரிகளிடம், சுமார் 15 கிலோ விதைகளை பெற்று பருத்தி நடவு செய்த விவசாயி ராமஜெயம் கடந்த மூன்று மாதங்கள் கடந்த நிலையில், பருத்தி பயிர் முறையாக வளரவில்லை என பருத்தி விதை தயாரிப்பு அதிகாரியிடம் கேள்வி எழுப்பி உள்ளார்.
மேலும், விதை தயாரிப்பு நிறுவனம் குறித்து செங்கம் வேளாண்மை விரிவாக்க மைய அதிகாரிகளிடம் பலமுறை தனியார் கம்பெனியின் விதைகளை ஆய்வு செய்ய வேண்டும் என புகார் அளித்துள்ளார்.
ஆனால், புகார் மீது எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாததால் இனி தனியார் விதை தயாரிப்பு கம்பெனியால், எந்த ஒரு விவசாயியும் விதைகள் வாங்கி பாதிக்கக் கூடாது என கூறி விவசாயி ராமஜெயம் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மைய அலுவலகம் முன்பு திடீரென விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
உடனடியாக அங்கு இருந்த பொதுமக்கள் அவரை காப்பாற்றினர். பின்னர், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செங்கம் போலீசார் விவசாயி ராமஜெயத்துடன் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு செங்கம் அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.
தீக்குளிக்க முயற்சி
திருவண்ணாமலை தாலுகா கீழ்நாத்தூர் ஏந்தல் கிராமம் (மதுரா) மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கந்தன் (வயது 48) என்பவர் அவரது மனைவி விமலா மற்றும் 2 மகள்கள் ஆகியோருடன் கலெக்டர் அலுவலகத்திற்குள் வந்தார்.
பின்னர் அவர்கள் மறைத்து கொண்டு வந்திருந்த டீசல் கேனை திடீரென எடுத்து உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி அவர்கள் மீது தண்ணீரை ஊற்றினர்.
பின்னர் அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது கந்தன் கூறியதாவது:-
நான் விவசாய கூலி வேலை செய்து வருகிறேன். எனக்கு சொந்தமான 2 சென்ட் நிலத்தில் ஒரு சென்டில் வீடு கட்டியுள்ளேன். மீதமுள்ள காலி மனையில் அந்த பகுதியை சேர்ந்த சிலர் குப்பைகளை கொட்டி இடத்தை ஆக்கிரமிப்பு செய்ய முயன்று வருகின்றனர்.
இதனை தட்டி கேட்ட என்னையும், என் மனைவி மற்றும் குழந்தைகளையும் அவர்கள் தாக்கினர். இதில் காயம் அடைந்த நாங்கள் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றோம். இதுகுறித்து திருவண்ணாமலை கிழக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எங்களது காலி மனையில் குப்பைகளை கொட்டி கொலை மிரட்டல் விடுத்து தாக்குதல் நடத்திய நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து போலீசார் சமாதானம் செய்து அவர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu