பட்டியலின மக்களுடன் கோவிலுக்குள் சென்றார் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர்

பட்டியலின மக்களுடன் கோவிலுக்குள் நுழைந்தார் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ்.
80 ஆண்டுகளாக கோயிலுக்குள் சென்று வழிபாடு செய்ய பிற சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், திருவண்ணாமலை ஆட்சியருடன் பட்டியலின மக்கள் கோயிலுக்குள் சென்று வழிபாடு செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த தென் முடியனூரில் அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயிலுக்குள் பட்டியலின சமூகத்தினர் செல்ல அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. கடந்த 80 ஆண்டுகளாக கோயிலுக்குள் சென்று வழிபட வேண்டும் என்பது தென் முடியனூர் கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும்.
இது தொடர்பாக பட்டியலின மக்கள் தொடர்ந்து பல முறை கோரிக்கை வைத்தும், பல்வேறு போராட்டங்களை நடத்தியும் தீர்வு காணப்படாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் அண்மையில் தென் முடியனூர் முத்துமாரியம்மன் கோயிலுக்குள் பட்டியலின மக்கள் சென்று வழிபட அனுமதி வழங்க வலியுறுத்தி திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து பட்டியலின மக்கள் முத்துமாரியம்மன் கோயிலுக்குள் சென்று வழிபட திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் அனுமதி அளித்தார்.
இந்த நிலையில் இன்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரின் உத்தரவை தொடர்ந்து போலீஸ் பாதுகாப்புடன் பட்டியலின மக்கள் தென் முடியனூர் முத்துமாரியம்மன் ஆலயத்திற்குள் நுழைய ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கு அப்பகுதியை சேர்ந்த உயர் சாதியினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து எதிர்ப்பு தெரிவித்து வரும் ஊர் மக்களுடன் உயரதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் தீர்வு எட்டப்படவில்லை. இந்த நிலையில் இன்று காலை திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தலைமையில் 500 க்கும் அதிகமான போலீசார் தென் முடியனூர் முத்துமாரியம்மன் கோயில் அருகே பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.
உயர் சாதியினரின் கடும் எதிர்ப்புகளையும் மீறி பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு மத்தியில் தலைமுறை தலைமுறையாக கோயிலுக்குள் நுழைய விடாமல் தடுத்து வைக்கப்பட்டு இருந்த பட்டியலின மக்களை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் முத்துமாரியம்மன் கோயிலுக்கு அழைத்து வந்தார்.
அவர்கள் உள்ளே வரக்கூடாது என்பதற்காக கோயில் பூட்டு போடப்பட்டு இருந்த நிலையில், அதனை உடைத்து பட்டியலின மக்களை கோயிலுக்குள் மாவட்ட ஆட்சியர் முருகேஷ் அழைத்து சென்றார். 80 ஆண்டுகளுக்கும் மேலாக தாங்கள் செல்ல முடியாத பகுதியாக இருந்த கோயிலுக்குள் சென்று பட்டியலின மக்கள் நெகிழ்ச்சியோடு வழிபட்டனர்.
இதுகுறித்து பேசிய திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயில்களை யாரும் உரிமை கொண்டாட முடியாது என்றும் கோயில்கள் அனைத்து சமுதாய மக்களுக்கும் பொதுவானது என்றும் பட்டியலின மக்கள் வழிபட எதிர்ப்பு தெரிவிக்கக்கூடாது என்றார்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் எடுத்த அதிரடி நடவடிக்கையின் காரணமாக 80 ஆண்டு கால பிரச்சினைக்கு இன்று தீர்வு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu