திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆடிப்பெருக்கு விழா

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆடிப்பெருக்கு விழா
X

ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு தென்பெண்ணை ஆற்றில் புனித நீராடிய பக்தர்கள்

தென்பெண்ணை ஆறு, செய்யாறு உள்ளிட்ட நீர்நிலைகளுக்கு சென்று மலர் தூவி பொதுமக்கள் வழிபட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆடிப்பெருக்கு விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர் தம்பதிகள் புது தாலி அணிந்து வழிபட்டனர்

தமிழர்களின் பாரம்பரியமிக்க ஆடி 18ஆம் பெருக்கு விழா காவிரிக் கரை, முக்கிய நீர் நிலைகளில் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. தென்மேற்குப் பருவத்தில் ஆற்றின் நீர் பிடி இடங்களில் பெய்த மழையினால் ஆறுகளில் புதுப்புனல் பொங்கிவரும்.

இந்நாளில் நம்பிக்கையுடன் பட்டம் பார்த்து விதை விதைத்தால் தை மாதத்தில் அறுவடை செய்ய முடியும். இதற்காக உறுதுணையாக இருக்கும் தண்ணீரை தெய்வமாக மதித்து, நீண்ட நெடுங்காலமாக தமிழ்நாட்டில் "ஆடிப்பெருக்கு விழா" கொண்டாடப்பட்டு வருகிறது.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நீப்பத்துறை தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் ஆடிப்பெருக்கு விழா கோலாகலமாக நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே உள்ள நீப்பத்துறை கிராமத்தில் தென்பெண்ணை ஆற்றின் கரையில் ஸ்ரீஅலமேலுமங்கை, பத்மாவதி சமேத ஸ்ரீபிரசன்ன வெங்கட்டரமண பெருமாள் கோவில் உள்ளது.

இக்கோவிலின் வரலாறு சார்ந்த பெருமாளின் தங்கையாக ஆற்றின் நடுவில் சென்னம்மாள் பாறை உள்ளது.

ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு சாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்து விஷேச பூஜைகள் நடைபெற்றன. இந்த ஆடிப்பெருக்கு விழாவிற்காக தமிழகத்தில் சேலம், தருமபுரி, விழுப்புரம், கிருஷ்ணகிரி, ஓசூர், திருவண்ணாமலை மற்றும் வேலூர் போன்ற பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்தனர்.

தமிழகம் மட்டும் இன்றி பெங்களூரு, கேரளா மற்றும் புதுச்சேரி போன்ற பிற மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீப்பத்துறைக்கு வருகை தந்தனர். மேலும், தென்பெண்ணை ஆற்றில் நீராடி, ஆற்றின் கரையிலேயே பொங்கல் வைத்து, தங்களது நேர்த்திக் கடனை செலுத்தி சென்னியம்மனை வணங்கி வழிபட்டனர்.

மேலும், திருமணமான தம்பதிகள் புனித நீராடியும், புது தாலி அணிந்தும் வழிபட்டனர். விரதம் இருந்த பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும் பொங்கல் வைத்தும் ஆடு, கோழி பலியிட்டு மொட்டை அடித்தும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்களுக்கு உணவு சமைத்து விருந்து பரிமாறினர்.

பக்தர்கள் வசதிக்காக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டது. கோயில் வளாகம் அருகாமையில் மேல் பள்ளிப்பட்டு வட்டார மருத்துவ அலுவலர் சிலம்பரசன் தலைமையில் மருத்துவக் குழுவினர் முகாம் அமைத்து பக்தர்களுக்கு அவசர சிகிச்சைகள் அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. டிஎஸ்பி தேன்மொழி வெற்றிவேல் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

அதேபோல் கலசப்பாக்கம் செய்யாற்றில் உள்ள நீர் நிலைகளுக்கு பொதுமக்கள் சென்று மலர் தூவி வழிபட்டனர்.

Tags

Next Story
டெல்லி டூ அமெரிக்கா அரை மணி நேரத்துலயா? என்னப்பா சொல்ற எலான் மஸ்க்..! | Delhi to America Flight Timings