திருவண்ணாமலை: திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆட்சியர் ஆய்வு

திருவண்ணாமலை: திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆட்சியர்  ஆய்வு
X

திருவண்ணாமலை மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை சார்பில் ஆய்வு கூட்டம் ஆட்சியர் முருகேஷ் தலைமையில் நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ஒன்றியத்தில் திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆட்சியர் தலைமையில் ஆய்வு கூட்டம் நடந்தது.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கூட்டரங்கில் செங்கம் ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராம ஊராட்சிகளில் ஊரக வளர்ச்சித்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்துத் திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தலைமை தாங்கி செங்கம் ஒன்றியத்தில் உள்ள 44 ஊராட்சிகளில் ஊரக வளர்ச்சித்துறை மூலம் நடந்துவரும் அனைத்துத் திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு மேற்கொண்டு ஆலோசனை நடத்தினார்.

அப்போது அவர், பிரதம மந்திரி வழங்கும் திட்டத்தின் கீழ் செங்கம் ஊராட்சி ஒன்றியத்துக்கு 2016-2017 முதல் 2021-2022ம் ஆண்டு வரை 4,646 வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன.

அதில் தற்போது கட்டப்பட்டு வரும் வீடுகள் மற்றும் நிலுவையில் உள்ள வீடுகள் என 2,357 வீடுகள் உள்ளன. நிலுவையில் உள்ள வீடுகளை பயனாளிகள் விரைந்து கட்டி முடிக்க வேண்டும். கட்ட இயலாத பயனாளிகளை கண்டறிந்து ஊராட்சி மன்ற தலைவர் மூலமாகவும் அல்லது ஒப்பந்ததாரர்கள் மூலமாகவும் வீடுகளை கட்டி முடிக்குமாறு அறிவுறுத்தினார்.

மேலும் பசுமை வீடுகள், மகாத்மா காந்தி தேசிய மேம்பாட்டு திட்டம், நமக்கு நாமே திட்டம் மற்றும் பொது நிதி பணிகளை உடனடியாக முடிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளவும், ஊராட்சி மன்ற தலைவர்கள் அனைவரும் அரசு வழங்கும் நிதியை முறையாக பயன்படுத்தி வீடுகள் கட்டும் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

அரசின் மூலம் செயல்படுத்தப்படும் அனைத்துப் பணிகளையும் விரைந்து முடிக்குமாறும், ஒன்றியக்குழு தலைவர், ஊராட்சி மன்ற தலைவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் அனைவரும் ஒன்றிணைந்து அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களின் பணிகளை சிறப்பான முறையில் மேற்கொண்டு மாவட்டத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும், எனக் கேட்டு கொண்டார்.

கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உதவி திட்ட அலுவலர்கள் அருண், உமா லட்சுமி, இமயவரம்பன், உதவி செயற்பொறியாளர் சங்கர், செங்கம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் எழிலரசு, ரபியுல்லா, செங்கம் தாசில்தார் முனுசாமி மற்றும் அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story