தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே மேம்பாலம் அமைக்கும் பணிகள் துவக்கம்
மேம்பால பணிகள் தொடங்கி வைப்பதற்காக ஆற்று நீரில் நடந்து வந்த அண்ணாதுரை எம்பி , எம்எல்ஏ கிரி.
தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே ரூ.16 கோடியில் மேம்பாலம் கட்டும் பணியை எம்.பி., எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டை அடுத்த தொண்டமானூர், அகரம் பள்ளிப்பட்டு பகுதியில் 3000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
இவர்கள் திருவண்ணாமலைக்கு வர வேண்டும் என்றால் தென்பெண்ணை ஆற்றை கடந்து கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில்துறைப்பட்டு வழியாக 10 கிலோமீட்டர் சுற்றி வந்தால் தான் ஊரில் இருந்து வெளியே வர முடியும்.
மழைக்காலங்களில் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் இவர்கள் ஊரில் இருந்து தண்டராம்பட்டு வெளியாக திருவண்ணாமலைக்கு வரவே முடியாது என்ற நிலை இருந்து வருகிறது.
தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே மேம்பாலம் கட்டப்பட்டால் தண்டராம்பட்டு வழியாக திருவண்ணாமலைக்கு எளிதில் வந்து விடலாம். எனவே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே மேம்பாலம் கட்ட வேண்டும் என்று பலமுறை கலெக்டர் எம்எல்ஏ, எம்பி இடம் கிராம பொது மக்கள் மனு அளித்திருந்தனர்.
தற்போது மேம்பாலம் கட்டுவதற்காக நபார்டு வங்கி நிதி உதவியுடன் ரூபாய் 16 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதை அடுத்து மேம்பாலம் கட்டுவதற்கான பணிகளை செங்கம் சட்டமன்ற உறுப்பினர் கிரி , திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை ஆகியோர் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் தாசில்தார் அப்துல் ரகுப், ஒன்றிய குழு தலைவர் பரிமளா கலையரசன், ஒன்றிய செயலாளர் ரமேஷ், ஒன்றிய துணை செயலாளர் வேலு, உதவி பொறியாளர் சந்தியா ,ஊராட்சி மன்ற தலைவர்கள் குணசேகரன், செல்வி, ஒன்றிய கவுன்சிலர்கள் கார்த்திக், கௌதமி, மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் மகேஸ்வரன், கிராம நிர்வாக அலுவலர் ஜெயமணி, மாவட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் , கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu