போலீசாரை கண்டித்து தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே லாரியை நிறுத்திய டிரைவர்
நெடுஞ்சாலையின் குறுக்கே லாரியை நிறுத்தி நூதன போராட்டத்தில் ஈடுபட்ட டிரைவர்.
திருவண்ணாமலை மாவட்டம் கடலாடி போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட அருணகிரிமங்களம் கூட்ரோடு அருகில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சகாதேவன் தலைமையில் போலீசார் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக போளூரில் இருந்து செங்கம் வழியாக ஒரு லாரி வந்தது. அந்த லாரியை ஓட்டி வந்த டிரைவர் முக கவசம் அணியவில்லை, எனத் தெரிகிறது.
இதையறிந்த போலீசார் லாரியை நிறுத்தி முக கவசம் அணியாமல் லாரியை ஓட்டி வந்த உங்களுக்கு அபராதம் விதிக்கிறோம் என்றனர். அதற்கு டிரைவர், என்னிடம் ரூ.100-யை தவிர வேறு பணம் இல்லை, என்றார்.
இதனால் ஆத்திரம் அடைந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர், டிரைவரை தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது.
இதனால் அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் லாரி டிரைவர் திடீரென லாரியை அங்கேயே போளூர்-செங்கம் தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே நிறுத்தி லாரியின் கீழே தார் சாலையில் படுத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டார்.
அதைத்தொடர்ந்து அந்த வழியாக வந்த மேலும் 2 லாரிகளின் டிரைவர்களும் போலீசாரின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தாங்கள் ஓட்டி வந்த லாரிகளை நடுரோட்டிலேயே நிறுத்தி விட்டனர்.
அங்கிருந்த பொதுமக்கள், அந்த லாரி டிரைவர்களுக்கு ஆதரவு தெரிவித்ததால் அப்பகுதியில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த போளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அறிவழகன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து நூதன போராட்டத்தில் ஈடுபட்ட டிரைவரிடம் லாரியை எடுக்குமாறு கூறினார். எனினும் அவர், லாரியை எடுக்க மறுத்து விட்டார்.
அதன் பிறகு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜகாளீஸ்வரன் சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்தார். தகாத வார்த்தையில் பேசி திட்டிய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் உறுதியளித்தார்.
அதன்பிறகே போளூர்- செங்கம் தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே நிறுத்திய லாரியை அதன் டிரைவர் எடுத்து ஓட்டிச் சென்றார். அங்கு நிறுத்தி வைத்திருந்த மேலும் 2 லாரிகளும் புறப்பட்டுச் சென்றன.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu