டாஸ்மாக் கடையில் மது பாட்டில்கள் திருட்டு..!
டாஸ்மாக் மதுபான கடை (கோப்பு படம்)
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த வெங்கடேசபுரம் பகுதியில் அரசு மதுபான கடை இயங்கி வருகிறது. இந்நிலையில் பகல் 12 மணிக்கு கடையை திறப்பதற்காக அந்த கடையின் சேல்ஸ்மேன் வந்திருந்தார்.
அப்போது கடையில் ஜன்னல் கதவுகள் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு சேல்ஸ்மேன் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக கடையை திறந்து பார்த்த போது ரூபாய் ஒரு லட்சம் மதிப்பிலான உயர்ரக மது பாட்டில்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இது குறித்த உடனடியாக சேல்ஸ்மேன் செங்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் விரைந்து வந்த செங்கம் போலீசார் அப்பகுதியை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அந்த ஆய்வின்போது சிசிடிவி கேமராவில் இருந்த ஹார்ட் டிஸ்க் கழற்றப்பட்டு இருப்பதும் தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
ஏற்கனவே இந்த மதுக் கடையில் இரண்டு முறை திருடு போயிருப்பது குறிப்பிடத்தக்கது. இரவு நேரங்களில் காவல்துறையினர் ரோந்து பணிக்கு வர வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
செங்கம் பேருந்து நிலையப் பகுதியில் பழுதடைந்த மின் விளக்குகள்
திருவண்ணாமலை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ளது செங்கம் பேருந்து நிலையம். இந்த செங்கம் பேருந்து நிலையம் முன்புறம் தேசிய நெடுஞ்சாலை மையப் பகுதிகளிலும் தேசிய நெடுஞ்சாலை ஓரங்களிலும் உயர் மின் கோபுர விளக்குகள் தெரு விளக்குகள் உள்ளன.
இதில் உயர்மின் கோபுர விளக்குகள் சில தினங்களாக பழுதடைந்து எரியாமல் உள்ளது. இதனால் பேருந்து நிலையம் இரவு நேரத்தில் இருட்டாக உள்ளது.
வெளியூரில் இருந்து செங்கம் பேருந்து நிலையத்திற்கு இரவில் வரும் பொதுமக்கள், கைக்குழந்தையுடன் வரும் தாய்மார்கள், வயதானவர்கள் என பலரும் சிரமத்திற்கு ஆளாகின்றனா். மேலும் வெளியூா் நபா்கள் பேருந்து இல்லாமல், காலையில் வரும் பேருந்திற்காக பேருந்து நிலையத்தில் படுத்திருந்தால் அவா்களின் கைப்பேசி, பணம், உடமைகள் திருடு போகின்றன.
மேலும் பேருந்து நிலைய உள்பகுதியில் கடை வைத்திருப்பவா்கள் இரவு நேரத்தில் கடைகளை அச்சத்துடன் மூடிவிட்டு செல்கிறாா்கள். இருண்ட நிலையில் இருப்பதால் கடையின் பூட்டை உடைத்து திருடு நடைபெறுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளன எனக்கடை வைத்திருப்பவர்கள் அச்சத்துடன் தெரிவிக்கின்றனர்.
மேலும் அரசு பேருந்து நிலையம் உள்ள பகுதியில் அரசு மதுபான கடை உள்ளதால் மது பிரியர்கள் மது அருந்திவிட்டு இருட்டில் வாகனங்களில் அதிவேகமாக வருவதால் விபத்துக்கள் ஏற்படுகிறது.
இதனால் மாவட்ட நிர்வாகமும் செங்கம் பேரூராட்சி நிர்வாகமும் உடனடியாக நடவடிக்கை எடுத்து பழுதடைந்த உயர் மின் கோபுர விளக்குகளை சரி செய்ய வேண்டும் மேலும் பேருந்து நிலையம் பகுதிகளில் கூடுதலாக மின் விளக்கு வசதி செய்து தர வேண்டும் என அப்பகுதி கடை உரிமையாளர்களும் பொதுமக்களும் எதிர்பார்க்கின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu