Opposition to Construct Toll Booth-திருவண்ணாமலை செங்கம் அருகே சுங்க சாவடி அமைக்க கடும் எதிர்ப்பு..!
சுங்க சாவடி , பைல் படம்
திருவண்ணாமலை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், செங்கம் அருகே கரியமங்கலத்தில் சுங்கச்சாவடி அமைக்க விவசாயிகள், பொதுமக்கள், யாதவ மக்கள் இயக்கம் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இதுகுறித்து யாதவ மக்கள் இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளா் செங்கம் ராஜாராம் வெளியிட்ட அறிக்கையில்:-
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட கரியமங்கலம் கிராமத்தில் திண்டிவனம்-பெங்களூரு சாலையில் சுங்கச்சாவடி அமைக்கும் பணிகள் தொடங்கி, நடைபெற்று வருகின்றன. இந்தப் பணியை மத்திய-மாநில அரசுகள் உடனே நிறுத்த வேண்டும். திண்டிவனம்-பெங்களூரு சாலை என்பது இரு வழிச் சாலையாகத்தான் உள்ளது. குறிப்பாக, திண்டிவனம் முதல் ஊத்தங்கரை புறவழிச் சாலை வரை இரு வழிச் சாலையாகத்தான் உள்ளது.
இந்தச் சாலையில் பெரும் விபத்துகள் நடைபெறுகின்றன. கடந்த மாதம் நடைபெற்ற இரு பெரும் விபத்துக்களில் 15-க்கும் மேற்பட்டோா் இறந்தனா். இதற்குக் காரணம் சரியான சாலை வசதி இல்லாததுதான். இப்போது சுங்கச்சாவடி அமைக்கும் பகுதியில் சுங்கக் கட்டணம் வசூலிக்கும் அளவுக்கு உள்கட்டமைப்பு இல்லை.
பவுா்ணமி, தீபத் திருவிழா நாட்களில் திருவண்ணாமலைக்கு வரும் பக்தா்களிடம் இருந்து வசூல் வேட்டை நடத்தும் நோக்கில் இந்த சுங்கச்சாவடி அமைக்கப்படுகிறது. செங்கம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்கள் அனைத்தும் விவசாயத்தையே நம்பி உள்ளன. இங்கு விளைவிக்கப்படும் விளை பொருள்களை விற்பனை செய்வதற்காக திருவண்ணாமலைக்கு எடுத்துச் செல்கின்றனா். இந்தச் சூழலில் சுங்கச்சாவடி அமைத்து செயல்பாட்டுக்கு வந்தால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவா்.
எனவே, கரியமங்கலம் பகுதியில் சுங்கச்சாவடி அமைக்கும் பணியை மத்திய-மாநில அரசுகள் உடனே நிறுத்த வேண்டும் என தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மேலும் இது குறித்த பகுதி விவசாயிகள் கூறுகையில்:
விவசாய நிலம், விவசாயிகள் நிறைந்தது, திருவண்ணாமலை மாவட்டம். தொழில் வளர்ச்சி இல்லாத மாவட்டம். பெங்களூரு, சென்னை போன்ற பெருநகரங்கள் மற்றும் கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்களுக்கு பல ஆயிரம் மக்கள் புலம் பெயர்ந்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகள், நகராட்சி மற்றும் ஊராட்சி சாலைகளை, விவசாய பெருங்குடி மக்கள், 90 சதவீதம் பயன்படுத்தி வருகின்றனர். கரும்பு, நெல், சிறுதானியங்கள், உளுந்து, காய்கனிகள், பூக்கள் உள்ளிட்ட வேளாண் பொருட்களை கொண்டு செல்வதற்காக பயன்படுத்தப்படுகிறது.
அனைத்து வகையான சாலைகளை சீரமைத்து கொடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், சாலைகளை தரமாக சீரமைத்து கொடுப்பதற்கு மாற்றாக, சுங்கச்சாவடிகள் மீது மத்திய அரசு கவனம் செலுத்துவது எந்த வகையில் நியாயம் என விவசாயிகள் கேள்வி எழுப்பினர். சுங்க சாவடி அமைக்கும் பணியை உடனடியாக மத்திய அரசு கைவிட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu