இரட்டை டம்ளர் முறை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை: கோட்டாட்சியர் எச்சரிக்கை

இரட்டை டம்ளர் முறை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை: கோட்டாட்சியர் எச்சரிக்கை
X

இரட்டை டம்ளர் முறை ( பைல் படம்)

இரட்டை டம்ளர் முறை பயன்படுத்துவதாக புகார் கூறப்பட்ட கிராமத்தில் கோட்டாட்சியர் நேரடி விசாரணை நடத்தினார்.

இரட்டை டம்ளர் முறை பயன்படுத்துவதாக புகார் கூறப்பட்ட கிராமத்தில் நேரடி விசாரணை நடத்திய உதவி ஆட்சியர் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த உத்தரவிட்டு குற்றச்சாட்டு நிரூபணமானால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.

திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டை அடுத்த மோத்தக்கல் ஊராட்சியில் பல்வேறு சமூகத்தைச் சேர்ந்த 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் ஒரு தரப்பை சேர்ந்தவர்கள் பாகுபாடு காட்டி நடத்தப்படுவதாக இளைஞர் ஒருவர் திருவண்ணாமலை கலெக்டர் முருகேசிடம் புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் தங்கள் கிராமத்தில் உள்ள டீக்கடையில் எங்கள் தரப்பினருக்கு பிளாஸ்டிக் கப்பிலும் மற்றவர்களுக்கு கண்ணாடி டம்ளரிலும் டீ, காபி வழங்குகின்றனர்.

கடைகளில் துணி வாங்கவும், சலூன்களில் முடி வெட்ட முடியாது எனவும் கூறுகிறார்கள் என தெரிவித்திருந்தார்.

இந்த மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க கோட்டாட்சியர் மற்றும் காவல் துறைக்கு ஆட்சியர் முருகேஷ் உத்தரவிட்டார்.

அதைத் தொடர்ந்து நேற்று மோத்தக்கல் ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் கோட்டாட்சியர் வெற்றிவேல் தலைமையில் இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடந்தது.

அதில் குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு டீக்கடைகளில் தனியாக பிளாஸ்டிக் கப்பில் வழங்குகிறார்கள். மளிகை கடைகளில் எங்களுக்கு பொருட்கள் வழங்குவதில்லை. எங்கள் பகுதியில் உள்ள கழிவறைகள் தூய்மை செய்வது கிடையாது. சமுதாயக்கூடத்தை சரி செய்து தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

இதற்கு மற்றொரு தரப்பு மக்கள் பேசும்போது இவற்றை மறுத்துக் கூறினர்.

பின்னர் கோட்டாட்சியர் வெற்றிவேல் பேசும்போது, உங்களது கோரிக்கைகள் அனைத்தும் சரி செய்து தரப்படும். உங்கள் பகுதியில் உள்ள கழிவறைகள் உடனடியாக சரி செய்து தரப்படும், சமுதாயக்கூடம் சரி செய்வதற்கு தேவையான நிதி வந்தவுடன் பணிகள் தொடங்கப்படும், ஊராட்சி பகுதியில் யாரும் பேனர்கள் வைக்க கூடாது.

மேலும் டீக்கடைகளில் மளிகை கடைகளில் பாகுபாடு காட்டப்படுகிறதா என்பதை கண்காணிப்பதற்கு அனைத்து தெருக்களிலும் காவல்துறை, வருவாய்த்துறை இணைந்து கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும். குற்றச்சாட்டு கண்டுபிடிக்கப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

கூட்டத்தில் தாசில்தார் அப்துல் ரகூப், போலீஸ் துணை சூப்பிரண்டுகள் முருகன், பாலச்சந்தர் இன்ஸ்பெக்டர் செல்வநாயகம் வருவாய் ஆய்வாளர்கள் யுவராணி, காளீஸ்வரி, சத்தியநாராயணன் கிராம நிர்வாக அலுவலர்கள் விக்னேஷ், ஏழுமலை, குமரகுரு, அன்பழகன் மற்றும் இருதரப்பு சார்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story