செங்கத்தில் அங்கன்வாடி பணியாளர்களுக்கான சிறப்பு பயிற்சி முகாம்
சிறப்பு பயிற்சி முகாமில் கலெக்டர் முருகேஷ் மற்றும் அதிகாரிகள்.
பள்ளிக்கல்வித்துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டப்பணிகள் துறை சார்பில் பள்ளி செல்லா, இடைநின்ற குழந்தைகளுக்கான கணக்கெடுப்பு பணிகள் செங்கம், புதுப்பாளையம், தண்டராம்பட்டு ஒன்றிய அங்கன்வாடி பணியாளர்களுக்கான சிறப்பு பயிற்சி முகாம் செங்கத்தில் நடைபெற்றது.
இம்முகாமிற்கு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தலைமை தாங்கி பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது,
பள்ளிக்கல்வித்துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டப்பணிகள் துறையின் மூலம் திருவண்ணாமலை மாவட்டத்தில் தேர்ச்சி சதவீதம் குறைவாக உள்ள பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட போது பொருளாதார சூழ்நிலை, ஊட்டச்சத்து குறைபாடு, குடும்ப சூழ்நிலைகள் என்பது தெரிய வந்தது.
இப்படிப்பட்ட சூழ்நிலையினை போக்க வேண்டுமென்றால் அங்கன்வாடி பணியாளர்களை கொண்டு பள்ளி செல்லா, இடைநின்ற மாணவர்களை வீடு வீடாக சென்று பள்ளி படிப்பின் அவசியத்தை எடுத்துரைத்து பள்ளி செல்லா, இடைநின்ற மாணவர்கள் மீண்டும் பள்ளியில் சேர்க்க அறிவுறுத்தப்பட வேண்டும்
படிப்பறிவு இல்லாத காரணத்தால் வெளிமாநிலம், வெளிநாடுகளுக்கு மாணவர்கள் சிறுவயதில் வேலைக்கு செல்கின்றனர். அதற்கு பள்ளிப்படிப்பு இடைநின்றலே முக்கிய காரணம்.
மேலும் இளம்வயதில் நடைபெறும் திருமணங்களை பெற்றோர்கள் தடுக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் குழந்தைகளின் வாழ்க்கை தரம் உயர்வடைந்து பொருளாதாரத்திலும், சமுதாயத்திலும் உயர்ந்த இடத்தை அடைவார்கள்.
. பெற்றோர்களாகிய நீங்கள் தங்கள் குழந்தைகளை சமுதாயத்தில் சிறந்தவர்களாக வளர்க்க ஆசைப்பட வேண்டும். அப்போதுதான் குழந்தைகள் நன்றாக கல்வி கற்பார்கள்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளி செல்லா, இடைநின்ற மாணவர்களின் எண்ணிக்கை மொத்தம் 3 ஆயிரத்து 11 ஆகும். இதில் செங்கத்தில் 203, புதுப்பாளையத்தில் 141, தண்டராம்பட்டில் 393 என மொத்தம் 737 மாணவர்கள் உள்ளனர். மாவட்டத்தில் 1800 அங்கன்வாடி பணியாளர்கள் பள்ளி செல்லா, இடைநின்ற குழந்தைகளை கணக்கெடுத்து அவர்களை மீண்டும் பள்ளியில் சேர வைக்கும் பணியில் ஈடுபட உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் வட்டார கல்வி அலுவலர்கள், வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டப்பணிகள் துறையைச் சார்ந்த குழந்தைகள் நல திட்ட அலுவலர்கள், வட்டார ஒருங்கிணைப்பாளர்கள், மேற்பார்வையாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu