இந்த காலத்திலுமா இப்படி? செங்கம் தேசிய நெடுஞ்சாலையில் பேய் நடமாட்டம் இருப்பதாக சிறப்பு பூஜைகள்

தேசிய நெடுஞ்சாலையில் நடைபெற்ற சிறப்பு பூஜைகள்
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம்-பெங்களூர் செல்லும் சாலையில் அந்தனூர் பக்கிரிப்பாளையம் கிராமங்களுக்கு அருகே அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. திருவண்ணாமலை ரோட்டில் பொதுமக்கள் நடந்து செல்லவே பயப்படுகிறார்களாம்.. என்ன காரணம்?
கடந்த அக்டோபர் மாதம் மேல்மலையனூர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு சென்ற கார் விபத்தில் சிக்கிவிட்டது.. அதில் பயணம் செய்த குழந்தை, பெண்கள் உட்பட 7 பேர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டனர்.
அதே பகுதியில் சுமார் 100 மீட்டர் தூரத்தில் கடந்த 23-ம் தேதி இரவு நடந்த சாலை விபத்தில் மீண்டும் விபத்தில் பலர் இறந்துவிட்டனர். கிட்டத்தட்ட ஒரே இடத்தில் நடந்த விபத்துகளால் 20-க்கும் மேற்பட்டோர் இதுவரை உயிரிழந்துள்ளனர். விபத்து நடந்த இடத்தில், சில வருடங்களுக்கு முன்பு, விவசாய பண்ணை இருந்திருக்கிறது. இப்போது, அந்த பண்ணை செயல்படாமலும் உள்ளது.. எனவே, அந்த பகுதியே, அடர்ந்த காடு போல காணப்படுகிறது. சாலையில் அடர்ந்த தைலம் மரங்கள், கருவேல மரங்கள், நிறைய உள்ளதால், மாலை வேலையில் இருட்டி விடுவதால் அப்பகுதி வெகுசீக்கிரத்திலேயே போதிய வெளிச்சம் இல்லாமல் இருட்டிவிடுகிறதாம்.
சாயங்காலம் 6 ஆகிவிட்டால், அதிகம் மரங்கள் இருப்பதால் காற்று வேகமாக வீசுகிறதாம். அதுவும் சுழல் காற்று வீசுகிறது.. நாய்கள் நிறைய சுற்றி சுற்றி வருகின்றனவாம்.. பறவைகள் அலறல் காதைக் கிழிக்கிறதாம். சாலைகளில் பனி படர்ந்து மூடிக்கொள்கிறதாம்.
சாலையின் குறுக்கே வெள்ளை கலரிலும், கருப்பு கலரிலும் மர்ம உருவங்கள் பல நடமாடுகிறதாம்.. விபத்தில் உயிரிழந்தவர்கள் இப்படி ஆவியாக நடமாடுவதாக, அந்த பகுதி மக்கள் பீதி யுடன் கூறுகிறார்கள்.
அந்த சாலையை கடந்து சென்றால் தான் டாஸ்மாக்கிற்கு செல்ல முடியும்.
ஆனால் டாஸ்மாக்கிற்கு செல்லவே மது பிரியர்கள் பயப்படுகிறார்கள், அந்த டாஸ்மாக் கடையிலே வியாபாரம் இல்லாமல் கடையையே வேற இடத்திற்கு மாற்றி விடலாமா என அதிகாரிகள் யோசிக்கும் அளவிற்கு பேய் பிரச்சனை உள்ளது.
வெளியூர்க்காரர்கள் மட்டும் விஷயம் தெரியாமல் கடைக்கு ஒன்று இருவர் மட்டும் வந்து செல்கின்றனராம்.
இந்நிலையில் நேற்றைய தினம், அப்பகுதியில் உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தி அடைய வேண்டும். விபத்தில் உயிர் சேதம் நடைபெறாமல் இருக்க வேண்டியும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றுள்ளது.. பம்பை மேளத்துடன் கோவிலில் இருந்து சாமி ஆயுதங்களுடன் ஊர்வலமாக சென்றனர். விபத்து நடந்த சாலையின் குறுக்கே மஞ்சள், குங்குமம், விபூதி, கற்பூரம் ஏற்றி பூசணிக்காய் உடைத்தனர். மேலும் கோழிகளை பலி கொடுத்து வழிபாடு நடத்தப்பட்டது.
இச்சம்பவம் குறித்து அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கூறுகையில், மக்களிடம் உள்ள இந்த பயத்தை பயன்படுத்தி நிறைய சமூக விரோத செயல்கள் அந்த சாலைகளில் நடக்க வாய்ப்பு உள்ளது, அதனால் சம்பவ இடத்தில் மாவட்ட நிர்வாகம் உடனடியாக வேகத்தடைகளை அமைக்க வேண்டும், அதிக அளவில் ஒளிரும் விளக்குகளையும் வழியெங்கும் பொருத்தி, மாலை மற்றும் இரவு நேரங்களில் காவல்துறையினர் அதிக அளவில் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டும் பொதுமக்களின் அச்சத்தையும் மாவட்ட நிர்வாகம் போக்கினால் நன்றாக இருக்கும் என தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu