ஏரியில் மீன்பிடிக்க சென்ற 2 பேர் கதி என்ன? தேடும் பணி தீவிரம்
ஏரியில் மூழ்கிய 2 பேரை தேடும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர்கள்
திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த வாணாபுரம் அருகே உள்ள கொட்டையூரில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரி உள்ளது. இந்த ஏரியில் தற்போது தண்ணீர் நிறைந்து காணப்படுவதால் அதிகளவில் மீன்கள் உள்ளது. சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமானவர்கள் ஏரிக்கு வந்து மீன் பிடித்து செல்கின்றனர்.
இந்த நிலையில் கொட்டையூர் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை. அவரது உறவினரான வாணாபுரம் அடுத்த குங்கிலியநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி. இருவரும் கூலி வேலை செய்கின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை இவர்கள் 2 பேரும் மீன்கள் பிடிக்க கிராமம் அருகே உள்ள ஏரிக்கு சென்றனர். நேற்று காலை வரை இவர்கள் வீடு திரும்பாததால் அவர்களது உறவினர்கள் சென்று பார்த்தபோது, ஏரிக்கரையோரம் சுப்பிரமணி, ஏழுமலை ஆகியோர் கொண்டு சென்ற பைக், ஆடைகள் மற்றும் செல்போன் ஆகியன இருந்தது. இதனால் அவர்கள் ஏரியில் மூழ்கி இருக்கலாம் என வாணாபுரம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில், காவல் உதவி ஆய்வாளர் முத்து தலைமையிலான காவல்துறையினர் மற்றும் தண்டராம்பட்டு தீயணைப்பு நிலைய அலுவலர் அசியோந்தி தலைமையில் கொண்ட வீரர்கள் அங்கு சென்று படகு மூலம் ஏரியில் மூழ்கிய 2 பேரை தேடும் பணியில் ஈடுபட்டனர். நேற்று இரவு நேரம் ஆனதால் தேடும் பணி நிறுத்தப்பட்டது. தொடர்ந்து இன்று காலை தேடும் பணிகள் மீண்டும் தொடங்கப்படும் என்று தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர்
ஏரியில் அதிக அளவில் செடி கொடிகளும், தாமரை செடிகளும் வளர்ந்துஇருப்பதால் தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. மேலும் ஏரி மிகவும் ஆழமாக இருப்பதால் பரிசலில் இறங்கி தீயணைப்பு வீரர்கள் தேடி வருகின்றனர்.
மேலும் இருவரும் மீன் பிடிக்க ஏரியில் இறங்கினார்களா? அல்லது வேறு எங்கேயாவது சென்றார்களா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu