ஆற்று வெள்ளத்தில் பள்ளி குழந்தைகளுடன் சிக்கிய பள்ளிப் பேருந்து

ஆற்று வெள்ளத்தில் சிக்கிய பள்ளிப் பேருந்து
தண்டராம்பட்டு அருகே 20-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளை ஏற்றிச் சென்ற தனியாா் பள்ளிப் பேருந்து, ஆற்று வெள்ளத்தில் சிக்கியது.
திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டம், தானிப்பாடி பகுதியில் தனியாா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது.
இங்கு தானிப்பாடி, ரெட்டியாா்பாளையம், மேல்வலசை, கீழ்வலசை, பீமாரப்பட்டி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனா். மாணவ-மாணவிகளை அழைத்துவர பள்ளிப் பேருந்து இயக்கப்படுகிறது.
இந்த நிலையில், நேற்று 20-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளை ஏற்றிய பள்ளிப் பேருந்து பீமாரப்பட்டி கிராமத்தில் உள்ள தரைப்பாலம் வழியே சென்றுகொண்டிருந்தது. வலசை கிராமத்தை சேர்ந்த ஏழுமலை என்பவர் பேருந்தை ஓட்டி சென்றார்.
இந்நிலையில் மேல்வலசை, கீழ்வலசை, செம்மம்பட்டி பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு பெய்த பலத்த மழை காரணமாக அங்குள்ள பாம்பாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் பீமாரபட்டி கிராமத்திலிருந்து பாம்பாற்றை கடந்து செல்ல முயன்றபோது பள்ளி பேருந்து திடீரென வெள்ளத்தில் சிக்கியது.
இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அருகிலிருந்த பொதுமக்கள், உடனடியாக பேருந்தில் இருந்த 20 மாணவர்களையும் பத்திரமாக மீட்டனர்.
தொடர்ந்து ஜேசிபி இயந்திரம் மூலம் வெள்ளத்தில் சிக்கியிருந்த பள்ளி பேருந்து மீட்கப்பட்டது.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில் , மழைக்காலத்தில் வெள்ளம் வரும்போது இந்த பாம்பாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. இதை கடந்து செல்ல முடியாமல் அனைவருக்கும் சிரமம் ஏற்படுகிறது.
மேலும் மழைக் காலங்களில் வயதானவர்கள், நோயாளிகள் மருத்துவமனைக்கு செல்ல மிகவும் சிரமம் ஏற்படுகிறது.
எனவே பாம்பாற்றின் குறுக்கே மேம்பாலம் கட்ட வேண்டும் என்ற எங்களது பல ஆண்டு கால கோரிக்கையை நிறைவேற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர் .
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu