விவசாய பாசனத்திற்காக சாத்தனூர் அணையில் நாளை தண்ணீர் திறப்பு

திருவண்ணாமலை மாவட்டம் விவசாய மாவட்டமாக திகழ்கிறது. இங்கு சாத்தனூர் அணையை நம்பி திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் 50 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் உள்ளன. அதோடு திருக்கோவிலூர் பழைய ஆயக்கட்டு பகுதியில் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பும், 105 ஏரிகளும், சாத்தனூர் அணையால் நேரடியாக பயன்பெறுகின்றன.
இந்நிலையில் கடந்த ஆண்டு தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை ஆண்டு சராசரியை விட அதிகமாக பெய்தது.ஆனாலும் சாத்தனூர் அணை 20 அடி உயரமுள்ள நீர்ப்போக்கி மதகுகள் சீரமைக்கும் பணி நடைபெறுவதால் அணையின் முழு கொள்ளளவு நீர் நிரப்ப முடியவில்லை. எனவே அணையின் மொத்த நீர்மட்டம் உயரமான 119 அடியில் தற்போது 10.80 அடியும், மொத்த கொள்ளளவான 7,321 மில்லியன் கன அடியில் தற்போது 3,441மில்லியன் கன அடியும் மட்டுமே நீர் இருப்பு உள்ளது.
எனவே சாத்தனூர் அணையிலிருந்து நேரடி பாசனத்திற்கு இந்த ஆண்டும் தண்ணீர் திறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் ஏரிகளுக்கு மட்டும் தண்ணீர் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி விவசாயிகளிடம் ஏற்கனவே நடத்தப்பட்ட கருத்துக் கேட்பு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி சாத்தனூர் அணையிலிருந்து நாளை (4-ந்தேதி) முதல் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அடுத்த மாதம் 19-ந் தேதி வரை தொடர்ந்து 45 நாட்களுக்கு அணையின் வலது மற்றும் இடது புற கால்வாய் வழியாக தண்ணீர் திறக்கப்படும்.
அணையில் தற்போது உள்ள நீர் இருப்பு 3,441மில்லியன் கன அடியில் திருக்கோவிலூர் பழைய ஆயக்கட்டு பரப்புக்கு 800 மில்லியன் கனஅடி, அணை குடியிருப்புகளுக்கு குடிநீர், பூங்கா பராமரிப்பு மற்றும் மீன் வளர்ப்பு ஆகியவற்றுக்கு 307.42 மில்லியன் கன அடி நீர் தேவைப்படுகிறது. மேலும் ஆவியாதல் போன்றவற்றால் 344.10 மில்லியன் கனஅடி நீர் இழப்பு ஏற்படும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. திருவண்ணாமலை, தானிப்பாடி, சாத்தனூர் கூட்டு குடிநீர் திட்டம் மற்றும் புதுப்பாளையம் நகராட்சி மற்றும் கூட்டு குடிநீர் திட்டம் ஆகியவற்றுக்கு அடுத்த 11 மாதங்களுக்கு 322.24 மில்லியன் கன அடி நீர் தேவைப்படுகிறது. மேலும் அணையில் தூர் வாரினால் நீரிழப்பு 500 மில்லியன் கனஅடி என கணக்கிடப்பட்டுள்ளது.
எனவே இது போன்ற தேவைகளுக்காக நீரை இருப்பு வைத்து போக மீதமுள்ள நீர் மட்டுமே விவசாய பாசனத்திற்கு தற்போது திறந்து விடப்படும்.அதன் பின்னர் வலது புற கால்வாய் வழியாக வினாடிக்கு 622.80 மில்லியன் கன அடியும், இடதுபுற கால்வாய் வழியாக விநாடிக்கு 544.32 மில்லியன் கன அடியும் நாளை முதல் திறக்கப்படும். அதன்மூலம் திருவண்ணாமலை மாவட்டத்தில் 34 ஏரிகள், விழுப்புரம் மாவட்டத்தில் 56 ஏரிகள் மற்றும் விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் பழைய ஆயக்கட்டு மூலம் 15 ஏரிகள் உள்பட மொத்தம் 105 ஏரிகளுக்கு தண்ணீர் கிடைக்கும். மேலும் இரண்டு மாவட்டங்களிலும் 12 ஆயிரத்து 543 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu