கருப்புக்கல் குவாரி அனுமதியை ரத்து செய்ய கிராம மக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு..!

கருப்புக்கல் குவாரி அனுமதியை ரத்து செய்ய கிராம மக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு..!
X

கிராம மக்களிடமிருந்து மனுவைப் பெற்றுக் கொண்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்

தண்டராம்பட்டு அருகே கருப்புக்கல் குவாரி அனுமதியை ரத்து செய்யக்கோரி கிராம மக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தண்டராம்பட்டு அருகே கருப்புக்கல் குவாரி செயல்பட வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்று கிராம மக்கள் ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா்.

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு வட்டம் ரோடு பாளையம் கிராமத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) தேன் மொழியிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது;

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு வட்டம் ரோடு பாளையம் கிராமத்தில் விவசாயிகள் அதிக அளவில் விவசாய தொழில் செய்வதோடு கால்நடை வளர்ப்பு பிரதான தொழிலாக உள்ளது. எங்கள் கிராமத்தில் கருப்புக்கல் குவாரி ஒன்று செயல்பட்டு வந்தது. இங்கு, நிா்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகமான ஆழத்தில் கற்கள் தோண்டி எடுக்கப்பட்டுவிட்டன.

இதனால் அந்த குவாரியின் அனுமதி ரத்து செய்யப்பட்டு குவாரி செயல்படாமல் இருந்து வந்தது.. பல ஆண்டுகளாக இங்கு அதிகப்படியான ஆழம் தோண்டி கருப்பு கல் எடுக்கப்பட்டு விட்ட காரணத்தால் அந்த குவாரி செயல்படாமல் இருந்து வந்தது

இந்நிலையில் குவாரியை மீண்டும் துவங்கும் வண்ணம் ஆட்கள் மற்றும் வாகன போக்குவரத்து அதிக அளவில் உள்ளது. இந்த குவாரி இயங்கினால் சுமார் 150 அடி ஆழத்திற்கு தண்ணீர் தேங்கும் நிலை ஏற்படும். இதனால் மழை பெய்யும் போது ஏரியில் சிறிதளவு மட்டுமே நீர் சென்று தேங்கும் நிலை உள்ளது. குவாரியின் நீர்மட்டம் கீழே சென்று விட்டால் அருகில் உள்ள சுமார் 30 முதல் 40 விவசாய கிணறுகள் நீர் வரத்து இன்றி வற்றி விடும்.

தற்சமயம் குவாரிக்கு அருகில் உள்ள ஆழக் குழாயில் இருந்து பெறப்படும் நீர் மூலம்தான் தண்டராம்பட்டு நகரில் உள்ள குடியிருப்புகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. குவாரிக்கு அருகில் ஏரியும் அதனை சுற்றி படர்ந்த காடுகளும் உள்ளன மேலும் குவாரியை சுற்றியுள்ள 200 ஏக்கர் நிலங்களுக்கு நீர் ஆதாரமான கிணறுகளின் ஊற்றுக்கள் குவாரியின் ஆழம் காரணமாகவும் மழை நீர் அனைத்தும் குவாரிக்கு சென்று அறநூறு அடி ஆழத்துக்கு கீழ் தேங்கி விடுவதால் சுற்றுப்புற விவசாயக் கிணறுகள் அனைத்தும் நீர் இல்லாமல் உள்ளது.

தண்டராம்பட்டு நகரத்திற்கும் ரோடு பாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த குவாரிக்கு அருகே ஏராளமான வீடுகள் உள்ளன. கற்களைத் தோண்ட வெடிகள் வெடிக்கும்போது உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

குவாரி செயல்பட்டால் விவசாயத்தையே நம்பி இருக்கும் விவசாயிகளும், விவசாயமும் பாதிக்கப்படும். எனவே, குவாரி அனுமதியை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

ஆட்சியா் நேரில் வந்து ஆய்வு செய்யும் வரை குவாரியை மீண்டும் இயங்குவதற்கான நடவடிக்கையை நிறுத்தி வைக்க வேண்டும். இல்லாவிட்டால் தண்டராம்பட்டு எம்ஜிஆா் சிலை எதிரே சாலை மறியலில் ஈடுபடுவோம் என்று ஆட்சியரின் நேர்முக உதவியாளா் (நிலம்) தேன்மொழியிடம் கூறினா்.

மனுவைப் பெற்றுக்கொண்ட அவா், இந்தப் பிரச்னை குறித்து ஆட்சியரின் கவனத்துக்கு கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்