நீர்பிடிப்பு பகுதியில் புதிய பள்ளி கட்டிடம் கட்ட பொதுமக்கள் எதிர்ப்பு

பள்ளி கட்டிடம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார் வட்டார வளர்ச்சி அலுவலர்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கரியமங்கலம் ஊராட்சியில் ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளி கட்டிடம் பழுதடைந்ததால் பழைய கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்ட ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் ஏற்கனவே கட்டிடம் இருந்த இடத்தில் இருந்து மாற்று இடத்தில் கட்டிடம் கட்ட அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.
இந்த நிலையில் புதிய பள்ளி கட்டிடம் கட்டுவதற்கு ஊராட்சி நிர்வாகம் சார்பில் இடம் தேர்வு செய்யப்பட்டு அதற்கான பணி தொடங்கப்பட்டது.
அதே பகுதியில் மற்றொரு தரப்பினர் பள்ளி கட்டிடம் கட்ட நீர்ப்பிடிப்பு பகுதி தேர்வு செய்யப்பட்டு உள்ளதாகவும், நீர்ப்பிடிப்பு அல்லாத இடத்தில் பள்ளி கட்டிட பணியை தொடங்க வேண்டும் எனவும் கூறி வந்தனர்.
இந்நிலையில் நீர் பிடிப்பு பகுதியில் தேர்வு செய்யப்பட்ட இடத்தில் கட்டிட பணிகள் தொடங்குவது குறித்து செங்கம் வட்டார வளர்ச்சி அலுவலர் அமிர்தராஜ் நேரில் ஆய்வு செய்தார். அப்போது அப்பகுதியில் நீர் பிடிப்பு பகுதியில் பள்ளி கட்டிடத்தை கட்டுவதற்கு ஒரு தரப்பினரும் பள்ளி கட்டிடம் இப்பகுதியில் கட்டக் கூடாது என மற்றொரு தரப்பினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலர் ஆய்வுக்குப் பின் கட்டிட பணிகள் அறிவிக்கப்படும் எனக் கூறிவிட்டு சென்றுவிட்டார்.
இதனைத் தொடர்ந்து செங்கம் வட்டாட்சியர் முனுசாமி சம்பவ இடத்திற்கு நேரில் வந்து ஆய்வு செய்தார்.அதைத்தொடர்ந்து இரு தரப்பினரும் தங்களது கோரிக்கைகளை வட்டாட்சியரிடம் தெரிவித்தனர்.
மேலும் கரியமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட மேல் கரியமங்கலம் பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு இடத்தில் இந்த பணியை துவக்க வேண்டும் எனவும் எதிர்த்தரப்பினர் கோரிக்கை வைத்தனர்.
நீர் பிடிப்பு பகுதியில் பள்ளி கட்டிடம் கட்டக்கூடாது எனவும் ஆய்வுக்குப் பின் தொடர்ந்து பணிகள் குறித்து அறிவிக்கப்படும் எனவும் கூறி வட்டாட்சியர் அங்கிருந்து சென்றார்.
மேலும் இந்த ஆய்வினை தொடர்ந்து அங்குள்ள அரசு பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் சத்துணவை மாணவர்களுடன் அமர்ந்து தாசில்தார் முனுசாமி சத்துணவு சாப்பிட்டு பார்த்து தரம் குறித்து ஆய்வு செய்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu