ஆதிதிராவிடர் நடுநிலை பள்ளியில் கூடுதல் கட்டிடங்கள் திறப்பு
வகுப்பறை கட்டிடங்களை திறந்து வைத்த கிரி எம் எல் ஏ
செங்கம் அருகே ரூ.29 லட்சம் மதிப்பீட்டின் புதியதாக கட்டப்பட்ட அரசு ஆதிதிராவிட நடுநிலைப்பள்ளி சட்டமன்ற உறுப்பினர் கிரி திறந்து வைத்தார்.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த பெரியகாயம்பட்டு அரசு ஆதிதிராவிட நடுநிலைப்பள்ளிக்கு கூடுதல் கட்டிடம் இல்லாததால் பள்ளி மாணவர்கள் மரத்தடியிலும், பள்ளி வராண்டாக்களிலும் அமர்ந்து படிக்கும் நிலை இருந்து வந்தது. இந்நிலையில் இரண்டு வகுப்பறைகள் கொண்ட கூடுதல் கட்டிடம் அமைத்து தர வேண்டுமென பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஊர் பொதுமக்கள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் சட்டமன்ற உறுப்பினருக்கு கோரிக்கை வைத்தனர். இந்தக் கோரிக்கையை ஏற்று அரசு ஆதிதிராவிட நலத்துறை மூலம் கூடுதல் கட்டடம் கட்டித்தர வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
செங்கம் சட்டமன்ற உறுப்பினரின் கோரிக்கையை ஏற்று ஆதிதிராவிட நலத் துறை மூலம் ஸ்மார்ட் கிளாஸ் உடன் கூடிய இரண்டு கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கு ரூ.29 லட்சம் கடந்த ஜனவரி மாதம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. பின்னர் ரூ.29 லட்சத்தில் இரண்டு வகுப்பறைகளிலும் ஸ்மார்ட் கிளாஸ் மற்றும் விளையாட்டு உபகரணங்களுடன் கட்டி முடிக்கப்பட்ட கூடுதல் இரண்டு வகுப்பறை கட்டிடத்தினை சட்டமன்ற உறுப்பினர் கிரி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இதில் பொதுமக்களுக்கும் பள்ளி மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கும் இனிப்புகள் வழங்கி எம்எல்ஏ கிரி பாராட்டு தெரிவித்தார். அப்போது பேசிய சட்டமன்ற உறுப்பினர் கிரி,
திராவிட மாடல் அரசு அனைத்து துறைகளிலும் அனைத்து திட்டங்களும் அடித்தட்டு மக்களுக்கு கிடைக்கும் வகையில் ஆட்சி செய்வதாகவும் பள்ளி மாணவர்களுக்கு தடையின்றி கல்வி பயில்வதற்கான முயற்சி தொடர்ந்து எடுத்து வருகிறது,
முதலமைச்சரின் முதன்மை திட்டங்களில், முதலமைச்சரின் காலை உணவு திட்டம் முக்கியமானது. ஊராட்சி ஒன்றியம் மற்றும் நகராட்சி பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்கள் காலை சிற்றுண்டியை விரும்பி உணவு உட்கொள்கின்றனர்.
பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் மாணவர்களுக்கு தேவையான உள்கட்டமைப்பு கழிவறை வசதி கூடிய அனைத்து வசதிகளிலும் தரமான கல்வி அளிக்க வேண்டும் என்ற நோக்கில் திட்டங்கள் விரைவாகவும் சிறப்பாகவும் கிடைக்கின்றது என கிரி எம்எல்ஏ பேசினார். நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் துணைவன், பள்ளி தலைமை ஆசிரியர் ரகுபதி,மேற்கு ஒன்றிய துணைச் செயலாளர் காயம்பட்டு செந்தில்குமார், அரசு ஒப்பந்ததாரர் சரவணன், தோழமை கட்சி நிர்வாகிகள் கணபதி, ஏழுமலை, அறிவுசெல்வன், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் அம்பேத்கார், கல்வி குழு தலைவர் தேவி, திமுக நிர்வாகிகள் ஏழுமலை, பச்சையப்பன் உள்ளிட்ட ஊர் பொதுமக்கள், மாணவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu