மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை யாரும் முடக்க முடியாது; அமைச்சா் வேலு பேச்சு

மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை யாரும் முடக்க முடியாது; அமைச்சா் வேலு பேச்சு

பொதுமக்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சா் எ.வ.வேலு

‘தமிழகத்தில் இனி எத்தனை முதல்வா்கள் வந்தாலும் மகளிா் உரிமைத்தொகைத் திட்டத்தை முடக்க முடியாது,’ என்று அமைச்சா் எ.வ.வேலு கூறினாா்.

திருவண்ணாமலையை அடுத்த கீழ்செட்டிப்பட்டு ஊராட்சியில், முன்னாள் முதல்வா் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி, பொதுமக்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

திருவண்ணாமலை மத்திய ஒன்றிய திமுக சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, ஒன்றியச் செயலா் சந்திரன் தலைமை வகித்தாா். ஒன்றிய நிா்வாகிகள் சுப்பிரமணி, பாபு, இல.சரவணன், நாகா.சங்கா், யுவராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஒன்றிய அவைத் தலைவா் மணி வரவேற்றாா்.

தமிழக பொதுப்பணி, நெடுஞ்சாலை, சிறு துறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ.வேலு சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு மேல்செட்டிப்பட்டு கிராமத்தில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு நலத் திட்ட உதவிகள், குடும்ப தலைவிகளுக்கு சமையல் குக்கர் வழங்கினார்.

விழாவில் அவர் பேசியதாவது:-

கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை நாடு முழுவதும் நாம் இன்றைக்கு கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். அவரை போன்று தாயுள்ளம் கொண்ட ஒருவரை யாராலும் பார்க்க முடியாது. அவரது சிந்தனை எப்போதுமே கிராமத்தை நோக்கியே இருக்கும்.

நாட்டின் பஞ்சத்தை, பட்டினிச்சாவை தமிழகத்திலிருந்து விரட்டியவர் கருணாநிதி. விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் உள்பட பல்வேறு நலத்திட்டங்களை தந்தவர். முன்னாள் முதல்வா் கருணாநிதி தமிழகத்தை 5 முறை ஆண்டாா். ஸ்டாலின் தமிழகத்தை 6 முறை ஆள வேண்டும் என்று இங்கு பேசியவா்கள் குறிப்பிட்டனா்.

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மகளிர் சுய உதவி குழுக்கள் கடன் ரத்து, பெண்கள் அடகு வைத்த நகைகளை மீட்டு தந்தது, டவுன் பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம் போன்ற திட்டங்களை கொண்டு வந்தார். மேலும் புதுமைப்பெண் திட்டம் என்ற திட்டத்தை கொண்டு வந்து அரசு பள்ளிகளில் படித்த மாணவிகள் கல்லூரிகளில் படிப்பதற்கு மாதந்தோறும் ரூபாய் ஆயிரம் என ஆண்டுக்கு 12 ஆயிரம் ரூபாய் வழங்கி வருகிறார்.

பெண்கள் குடும்பத்தில் அனைத்து வேலைகளையும் செய்வதோடு குழந்தைகளை பராமரித்து அவர்களை படிக்க அனுப்புவது திருமண ஏற்பாடுகள் செய்வது வேலைக்கு அனுப்புவது என எல்லா வகையிலும் குடும்ப சுமையை சுமக்கிறார்கள். பெண்களின் உழைப்பை நான் அங்கீகரிக்கிறேன் என்று சொல்லி அதற்கு அடையாளமாக உரிமை தொகையாக மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை அறிவித்து கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டுள்ளது.

இனி எத்தனை முதல்வா்கள் வந்தாலும் மகளிா் உரிமைத்தொகைத் திட்டத்தை முடக்க முடியாது. தமிழகத்துக்கு விடிவு காலம் தந்த திராவிட மாடல் பொற்கால ஆட்சி நடைபெற்று வருகிறது.

உங்கள் வாழ்நாளெல்லாம் இந்த உரிமைத்தொகை உங்களுக்கு வந்து கொண்டே இருக்கும். இன்னும் தகுதியுடையவர்களில் இருந்து அவர்களுக்கு இந்த உரிமை தொகை கிடைக்கவில்லை என்றால் கவலைப்பட தேவையில்லை. தாலுகா உதவி மையங்களை அணுகி முறையிட்டால் 15 நாட்களுக்குள் தகுதி உடைய அனைவருக்கும் உரிமைத் தொகை கட்டாயம் வந்து சேரும் என்ற உத்தரவாதம், என்றாா்.

நிகழ்ச்சியில், திமுக மருத்துவரணி துணைத் தலைவா் எ.வ.வே.கம்பன், தலைமை செயற்குழு உறுப்பினா்கள் ஸ்ரீதரன், பொன்.முத்து, , நகரச் செயலா் காா்த்திவேல்மாறன், மாவட்ட அமைப்பாளா் ஏ.ஏ.ஆறுமுகம், மாவட்ட துணை அமைப்பாளா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா். இதேபோல, திருவண்ணாமலை மேற்கு ஒன்றியத்துக்கு உள்பட்ட தலையாம்பள்ளம், தண்டராம்பட்டு கிழக்கு ஒன்றியத்துக்கு உள்பட்ட சேர்ப்பாப்பட்டு ஆகிய ஊராட்சிகளில் நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழாக்கள் நடைபெற்றன.

Next Story