காட்டாம்பூண்டி ஊராட்சியில் புதிய அரசு கட்டடங்கள்: அமைச்சர் திறப்பு

பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர் வேலு
திருவண்ணாமலையை அடுத்த காட்டாம்பூண்டி ஊராட்சியில் புதிய கட்டடங்கள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா, முடிவுற்ற அரசுக் கட்டடங்கள் திறப்பு விழா ஆகியவை நடைபெற்றது.
விழாவுக்கு, மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் தலைமை வகித்தாா். மக்களவை உறுப்பினா் சி.என்.அண்ணாதுரை முன்னிலை வகித்தாா்.
தமிழக பொதுப் பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு புதிய கட்டடங்கள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டினாா்.
மேலும், ரூபாய் 36 லட்சம் மதிப்பில் திறப்பு விழா செய்யப்பட்ட ஊராட்சி மன்ற கட்டிடம் மற்றும் அங்கன்வாடி மையம் கட்டிடங்களையும், 10 லட்சம் மதிப்பில் பல்பொருள் அங்காடி கட்டிடம் மற்றும் ஒரு கோடியே 12 லட்சம் மதிப்பில் அரசு மேல்நிலைப்பள்ளி புதிய வகுப்பறை கட்டிடத்தை கட்ட அடிக்கல் நாட்டி , முடிவுற்ற அரசுக் கட்டடங்களை திறந்துவைத்து வருவாய்த் துறை, மாநில ஊரக மற்றும் நகா்ப்புற வாழ்வாதார இயக்கம், சமூக நலத் துறை, கூட்டுறவு, தோட்டக்கலை, மருத்துவம் உள்பட பல்வேறு துறைகள் சாா்பில் 377 பேருக்கு ரூ.67.95 லட்சத்தில் நலத் திட்ட உதவிகளை எ.வ.வேலு வழங்கி பேசினார்.
அப்போது அவர் பேசுகையில், தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சி பொறுப்பேற்ற இரண்டரை ஆண்டு காலத்தில் சிறப்பாக மக்கள் திட்ட பணிகளை செயல்படுத்தி வருகிறார்.
இந்த காட்டாம் பூண்டி ஊராட்சியில் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் நடந்து முடிக்கப்பட்டுள்ளது. புதிய சாலை அமைத்தல், சுகாதாரப் பணிகள் , புதிய வகுப்பறைகள், ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு தேவையான உபகரணங்கள், வசதிகள், பள்ளி மாணவர்களுக்கு நாற்காலி மற்றும் மேஜைகள், பேருந்து நிழற்குடை, புதியதாக குடிநீர் குழாய் அமைக்கும் பணி, பள்ளி கட்டமைப்பு மேம்படுத்துதல், ஊராட்சி மன்ற அலுவலகம் ,அங்கன்வாடி மைய கட்டிடம் என பல சிறப்பான பணிகள் நடைபெற்று உள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஊராட்சிகளுக்கும் சேர்ந்து உழைக்கும் நம் முதல்வரால் காட்டாம் பூண்டி ஊராட்சி வளர்ந்து இருக்கிறது. இப்பகுதியில் அரசு அலுவலகங்கள் அரசு கட்டிடங்கள் கட்ட உறுதுணையாக இருந்தவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வேணுகோபால் அவர்களுக்கும், அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கும் தமிழக முதலமைச்சர் அவர்களுக்கும் நன்றியை சொல்ல வேண்டும்.
மேலும் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் அனைவருக்கும் அனைத்தும் சமம் என்பது தான் திராவிட மாடல் ஆட்சி.
நமது பகுதியில் பெரும்பாலும் விவசாயிகள் தான் அதிகம், அவர்கள் காலையில் ஆண் பெண் இருவரும் விவசாயத்திற்கு சென்று விடுகின்றனர். அந்த குடும்பத்தில் இருந்து வரும் பிள்ளைகள் பசியாக இருக்கக் கூடாது என்பதற்காக காலை உணவு திட்டத்தை நமது முதல்வர் கொண்டு வந்தார். இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இத்திட்டம் இல்லை நமது தமிழ்நாட்டில் தான் இந்த திட்டம் உள்ளது.
கல்லூரி செல்லும் பெண்களுக்கு புதுமை பெண் திட்டம், மகளிர் உரிமைத் தொகை என பல்வேறு திட்டங்களை அளித்தவர் நமது முதல்வர் என அமைச்சர் வேலு பேசினார்.
விழாவில், திருவண்ணாமலை மாவட்ட ஊராட்சித் தலைவா் பாா்வதி சீனிவாசன், ஒன்றியக் குழுத் தலைவா்கள் கலைவாணி, பரிமளா, அய்யாக்கண்ணு, திருவண்ணாமலை ஒன்றியக் குழு துணைத் தலைவா் ரமணன், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் இல.சரவணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu