என்னை இந்த உலகத்திற்கு அளித்த என் தாய் தான் எனக்கு பெரிய கடவுள்: அமைச்சர் வேலு
விழாவில் பேசிய அமைச்சர் வேலு
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் எதிரே முத்தமிழ் அறிஞர் கலைஞரின் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு தென்பெண்ணை இலக்கியச் சமவெளி இயக்கத்தின் சார்பில் சிலப்பதிகாரம் நவீன நாடகம் அரங்கேற்றம் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு செங்கம் சட்டமன்ற உறுப்பினர் கிரி தலைமை தாங்கினார். திமுக மருத்துவர் அணியின்மாநில துணைத் தலைவர் எ.வ.வே. கம்பன், திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை ஆகியோர் முன்னிலை வகித்து வாழ்த்துரை வழங்கி பேசினார்கள்.
இந் நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்துகொண்டு கலை நிகழ்ச்சிகள் சிலப்பதிகார நவீன நாடகம், பறை இசை, பரதநாட்டியம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை துவக்கி வைத்து பேசினார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
எனக்கு பள்ளி பருவத்தில் இருந்தே இலக்கியத்தின் மீது தீராத பற்றும் ஒரு ஈர்ப்பும் உண்டு. பள்ளிகளில் அப்போது இலக்கிய மன்றத்தின் வகுப்பு கடைசி வகுப்பாக இருந்தது.அப்போதிலிருந்தே இலக்கியத்தின் மீதும் கவிதை தொகுப்பின் மீதும் எனக்கு ஈர்ப்பு இருந்தது. நான் எட்டாம் வகுப்பு படிக்கும் பொழுதே ராகத்தோடு பாட்டு எழுதினேன். அதன் தொடர்ச்சியாக தான் நானே நாடகங்களை எழுதி அமைப்புகளை வைத்து அரங்கேற்றங்களைசெய்தேன்.
தலைவர் கலைஞர் மூன்று தமிழ்களையும் அறிந்த அறிஞர். அதனால்தான் அவர் முத்தமிழ் அறிஞர் என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படுகிறார். இத்தகைய தலைவருக்கு தான் நூற்றாண்டு விழா எடுத்து இருக்கிறோம். அவர் கையால் இயற்றப்பட்ட சிலப்பதிகார நாடகம் இங்கே அரங்கேற்றப்பட்டுள்ளது.
இந்த உலகில் தாயை விட பெரிய கடவுள் கிடையாது. என்ன இந்த உலகத்திற்கு அளித்த என் தாய் தான் எனக்கு பெரிய கடவுள். சிலப்பதிகாரம் தான் பெண்களை உயர்வாக பேசுகிறது. சிலப்பதிகாரத்தை கலைஞர் இயற்றிய காரணத்தினால் தான் 5 முறை ஆட்சிக்கு வந்த தலைவர் கலைஞர் பெண்களுக்கான பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தார்.
கலைஞர் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்கு காரணம் சிலப்பதிகாரம்தான். சிலப்பதிகாரம் என்பது தமிழர்களின் சிறப்புமிக்கது. தமிழ்நாட்டில் உள்ள பாமர மக்களும் சிலப்பதிகாரத்தை தெரிந்து கொண்டது கலைஞர் எழுதிய பூம்புகார் என்ற திரைப்படத்தின் மூலம் தான்.அனைத்து பட்டி தொட்டிகளுக்கும் கொண்டு சேர்த்தது பூம்புகார் திரைப்படம் தான்.
திமுக ஆட்சி எப்பொழுதெல்லாம் தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வருகிறதோ அப்பொழுதெல்லாம் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து பெண்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து அடித்தட்டு பெண்கள் வரை அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது என்று அமைச்சர் எ.வ. வேலு பேசினார்.
நிகழ்ச்சியில் தென்பெண்ணை இலக்கிய சமவெளி ஒருங்கிணைப்பாளர்கள், வரலாற்று ஆய்வு மைய நிர்வாகிகள், எழுத்தாளர்கள், மாவட்ட ஒன்றிய நகர கழக நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu