திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையில் முறைகேடு

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையில் முறைகேடு
X

ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகம் (கோப்பு படம்)

திருவண்ணாமலை மாவட்டத்தில், ஆதிதிராவிடர் நலத்துறையில் முறைகேடு, 17 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையில் பல லட்சம் ரூபாய் முறைகேட்டில் ஈடுபட்ட தாசில்தார் உள்பட 17 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

செங்கம் ஆதிதிராவிடர் நல அலுவலகத்தில் தனி தாசில்தாராக பணிபுரிந்த ரமேஷ் (தற்போது ஜமுனாமரத்தூர் தாசில்தாராக உள்ளார்) மீது மலைப்படி நிலுவைத் தொகை மற்றும் இதர நிலுவைத் தொகை போன்ற இனங்களில் போலியாக பட்டியல் தயார் செய்து வேறு நபர்களின் வங்கி கணக்கிற்கு பல லட்சம் ரூபாய் பற்று வைக்கப்பட்டு உள்ளதாக புகார்கள் வந்தன.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் முருகேஷ் மற்றும் சென்னையில் உள்ள ஆதிதிராவிடா் நல ஆணையா் அலுவலக அதிகாரிகள் செங்கம், போளூா் பகுதிகளில் இயங்கி வரும் ஆதிதிராவிடா் நல தனி வட்டாட்சியா் அலுவலகங்களில் தீவிர ஆய்வில் ஈடுபட்டனா். ஆய்வில், மலைப்படி நிலுவைத்தொகை மற்றும் இதர நிலுவைத் தொகை, சரண்டா் என பல்வேறு செலவினங்களில் போலியாக பில்கள் தயாரித்து பல லட்சம் அரசுப் பணம் முறைகேடு செய்யப்பட்டு இருந்தது தெரியவந்தது.

எனவே, இதில் தொடா்புடையவா்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு லஞ்ச ஒழிப்புத்துறைக்கு ஆதிதிராவிடா் நலத்துறை ஆணையா் அலுவலகம் பரிந்துரை செய்தது.

மேலும் ஆய்வுக்குழு அறிக்கையின் படி தனி தாசில்தாராக பணிபுரிந்த ரமேஷ் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி செங்கம் தனிதாசில்தார் அலுவலகத்தில் பணியாற்றிய காலமான 1.5.2018 முதல் 28.8.2020 வரையில் உள்ள அனைத்து ஆவணங்களையும் குற்றத்தை மறைக்கும் நோக்கில் அழித்ததாகவும், அதற்கு உடந்தையாக இளநிலை வருவாய் ஆய்வாளர் மணிகண்டன் இருந்ததாகவும் கூறப்படுகிறது. எனவே அவர்கள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கையும், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறையினரால் குற்றவியல் வழக்கு தொடரவும் பரிந்துரை செய்யப்பட்டது.

அதன்படி, திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்புத் துறையினா் 2 தனி வட்டாட்சியா்கள், உள்பட 17 பேர் மீது திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் மைதிலி தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story