திருவண்ணாமலை சாத்தனூர் அருகே அயர்லாந்து நாட்டுப் பெண் மர்ம மரணம்

திருவண்ணாமலை சாத்தனூர் அருகே அயர்லாந்து நாட்டுப் பெண் மர்ம மரணம்
X

திருவள்ளூர் செய்திக்கான கோப்பு படம்.

திருவண்ணாமலை மாவட்டம சாத்தனூர் அருகே அயர்லாந்து நாட்டுப் பெண் மர்ம மரணம் பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சாத்தனூர் அருகே பண்ணை வீட்டில் வசித்து வந்த அயர்லாந்து நாட்டை சேர்ந்த பெண் மர்மமான முறையில் இறந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். புதைக்கப்பட்ட பெண்ணின் உடலை தோண்டி எடுத்து பரிசோதனை செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அருகில் உள்ள நெடுங்காவாடி கிராமத்தில் ரஷ்ய நாட்டை சேர்ந்த ஒருவர் 5 ஆண்டுக்கு முன்பு நிலம் வாங்கி அதில் பண்ணை வீடு அமைத்து வசித்து வந்தார். பின்னர் அவர் ரஷ்யா சென்று விட்டார்.

அப்போது அவர் திருவண்ணாமலையில் வசித்து வந்த அயர்லாந்து நாட்டை சேர்ந்த 60 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவருக்கு வீட்டை வாடகைக்கு விட்டு சென்றார்.

அந்த பெண் பண்ணை வீட்டில் தனியாக வசித்து வந்தார். இதனால் தனது பாதுகாப்புக்காக 3 நாய்களையும் வளர்த்து வந்தார்.

இவருக்கு, திருவண்ணாமலையைச் சேர்ந்த ஹரி, என்பவர் உதவியாளராக இருந்தார்.

பார்ப்பதற்கு மங்களகரமாக இருக்கும் அந்த மூதாட்டியை அங்கிருப்பவர்கள் மீனாட்சியம்மாள் என செல்லமாக பெயர் சூட்டி அழைத்து வந்தனர்.

ஹரி, ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும், காய்கறி, பழம் வாங்கி வந்து கொடுப்பது வழக்கம்.

இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று வழக்கம் போல மீனாட்சி அம்மாளை பார்ப்பதற்கு ஹரி நெடுங்காவாடி பண்ணை வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது நாய்கள் தொடர்ந்து குரைத்துக் கொண்டிருந்தன. உள்ளே சென்று பார்த்தபோது மீனாட்சி அம்மாள் இறந்து அழுகிய நிலையில் பிணமாக கிடந்துள்ளார்.

பின்னர், ஹரி மற்றும் கிராமத்தினர் மீனாட்சியம்மாள் உடலை சடங்குகள் செய்து அதே பண்ணை வீட்டில் புதைத்துள்ளனர்.

நேற்று ஹரி இறந்த அயர்லாந்து பெண் மீனாட்சியம்மாளுக்கு இறப்பு சான்றிதழ் கேட்டு கிராம நிர்வாக அலுவலர் சாலம்மாவிடம் மனு கொடுத்துள்ளார்.

அப்போது சந்தேகம் அடைந்த கிராம நிர்வாக அலுவலர் இறந்த பெண்மணி அயர்லாந்து நாட்டை சேர்ந்தவர் என்பதால் அது குறித்து வருவாய்த்துறை, காவல்துறைக்கு புகார் தெரிவித்தார்.

அதன்படி இன்று தாசில்தார் அப்துல்ரகூப், மண்டல துணை தாசில்தார் மோகனராமன், துணை காவல் கண்காணிப்பாளர் தேன்மொழி வெற்றிவேல், வருவாய் ஆய்வாளர் சத்திய நாராயணன் உள்ளிட்ட அதிகாரிகள் விரைந்து சென்று கிராம மக்களிடம் விசாரணை நடத்தினர்.

அயர்லாந்து பெண் புதைக்கப்பட்ட இடத்தையும் அவர்கள் பார்வையிட்டனர். அதைத் தொடர்ந்து இறந்த அயர்லாந்து பெண்ணிடம் தொடர்பில் இருந்த ஹரி உள்ளிட்ட நபர்களிடமும் அவரை புதைத்த கிராம முக்கிய பிரமுகர்களிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அயர்லாந்து நாட்டு பெண்ணை கிராம மக்கள் மீனாட்சி அம்மாள் என்று அழைத்தாலும் அவரது உண்மையான பெயர் யாருக்கும் தெரியவில்லை.

மேலும் இறந்த மீனாட்சி அம்மாளின் இறப்பு குறித்து அயர்லாந்தில் உள்ள அவரது சகோதரருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் பின்னரே, அவர் எப்படி இறந்தார்? இயற்கையாகவே இறந்தாரா அல்லது பணத்திற்காக அவரை யாரேனும் கொலை செய்தார்களா? என்பது தெரிய வரும் என அதிகாரிகள் கூறினர். இதனை தொடர்ந்து இன்று காலை டி.எஸ்.பி. தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

பண்ணை வீட்டிலிருந்த 3 நாய்களும் மீட்கப்பட்டு திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள காப்பகத்தில் விடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story