வடகிழக்கு பருவ மழையையொட்டி பாலங்கள் சீரமைக்கும் பணி தீவிரம்

வடகிழக்கு பருவ மழையையொட்டி பாலங்கள் சீரமைக்கும் பணி தீவிரம்

பொக்லைன் இயந்திரம் மூலம் நடைபெற்று வரும் சீரமைப்பு பணிகள்

செங்கம் பகுதியில் பாலங்கள் சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியில் நெடுஞ்சாலைத் துறை கட்டுப்பாட்டில் உள்ள மேம்பாலம் மற்றும் சிறுபாலங்கள் சீரமைப்புப் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

வடகிழக்கு பருவ மழையையொட்டி, செங்கம், செ.நாச்சிப்பட்டு, பக்கிரிபாளையம், இளங்குண்ணி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள சிறுபாலங்களை சீரமைக்கும் பணியை நெடுஞ்சாலைத் துறையினா் மேற்கொண்டு வருகின்றனா்.

மேலும், முன்னெச்சரிக்கையாக இதுபோன்று பணிகளை செய்வதால் மழை நேரங்களில் சாலையில் வெள்ளம் செல்லாமல் இருக்கும், அதே நேரம் பொதுமக்களுக்கும், விவசாயிகளுக்கும் எந்தவித பாதிப்பும் மழை நீரால் ஏற்படாமல் தடுக்கமுடியும்.

மேலும், மழைநீா் வீணாகாமல் நீா்நிலைகளுக்குச் சென்று தேங்குவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

செங்கம் பகுதியில் நடைபெற்று வரும் மேம்பாலம், சிறுபாலம் சீரமைக்கும் பணியை திருவண்ணாமலை கோட்டப் பொறியாளா் ஞானவேல், செங்கம் உள்கோட்டப் பொறியாளா் கோவிந்தசாமி ஆகியோா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

உதவிப் பொறியாளா் பிரீத்தி, சாலை ஆய்வாளா் குமாா் மற்றும் சாலைப் பணியாளா்கள் உடனிருந்தனா்.

தண்டராம்பட்டில் 63 மி.மீ.மழை

திருவண்ணாமலை மாவட்டத்தில் புதன்கிழமை இரவு முதல் வியாழக்கிழமை மாலை வரை அதிகபட்சமாக தண்டராம்பட்டில் 63.2 மி.மீ.மழை பதிவானது.

இதுதவிர, திருவண்ணாமலையில் 15, செங்கத்தில் 26.4, கலசப்பாக்கத்தில் 11, ஆரணியில் 2.8, வந்தவாசியில் 23, கீழ்பென்னாத்தூரில் 41 மில்லி மீட்டா் மழை பதிவானது.

இந்நிலையில் நேற்று மாலை முதல் இன்று அதிகாலை வரை திருவண்ணாமலை வேங்கிக்கால், ஆட்சியா் அலுவலகம், அடி அண்ணாமலை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் 20 நிமிடங்களுக்கு மேலாக லேசானது முதல் பலத்த மழை வரை பெய்தது.

இதனால் அனல் காற்று வீசுவது குறைந்து, குளிா்ந்த காற்று வீசியது. இந்த மழையால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

Next Story