செங்கம் அருகே சவக்குழியில் படுத்த விவசாயி- தொடரும் நூதன போராட்டம்

செங்கம் அருகே சவக்குழியில் படுத்த விவசாயி- தொடரும் நூதன போராட்டம்
X

செங்கம் காவல்துறையினர்,  விவசாயிடம் சமரசம் பேசி கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியர் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்படும் எனக்கூறி, சவக்குழியில் இருந்து எழுப்பி அழைத்து சென்றனர்

மாவட்ட ஆட்சியர், செங்கம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்து நேரில் ஆய்வு செய்யக்கோரி நூதன முறையில் சுடுகாட்டில் போராட்டம் நடத்திய விவசாயியால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது .

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் சுடுகாட்டில் விவசாயி ராமஜெயம் என்பவர் சாமானிய மக்களுக்கும் மற்றும் விவசாயிகளுக்கும் எதிராக செயல்படும் செங்கம் வட்ட அரசு ஊழியர்களை கண்டித்து தனக்கு தானே சவக்குழி தோண்டி. உயிருடன் சவக்குழியில் இறங்கி நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டார்.

செங்கம் பகுதியில் வேளாண்மை துறை, தோட்டக்கலை துறை, வனத்துறை, வருவாய் துறை என விவசாயிகள் தேடிச் செல்லும் அனைத்து துறைகளிலும் தமிழக அரசு அறிவிக்கப்பட்ட சலுகைகளை சாதாரண விவசாயிகளுக்கு அரசு அதிகாரிகள் செய்யாமல், எதிராக செயல்படுவதாகவும் இது குறித்து மாதாந்திரம் நடக்கும் விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்தில் பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லாததால் விவசாயி மனமுடைந்தார்.

ஏற்கனவே, ஆணி கட்டிய செருப்பை அணிந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று போராட்டம், தீ மிதித்து சத்தியம் செய்யும் போராட்டம் போன்ற பல போராட்டங்கள் நடத்தியும் எவ்வித நடவடிக்கையும் இல்லாததால் தற்பொழுது திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் செங்கம் அரசு அலுவலகத்திற்கு வந்து நேரடியாக ஆய்வு செய்து விவசாயிகளின் குறைகளை அறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, சாதாரண விவசாயிகள் ஒருங்கிணைப்பாளர் விவசாயி ராமஜெயம் சவக் குழியில் இறங்கி நூதன முறையில் போராட்டம் நடத்தி கோரிக்கை வைத்துள்ளார்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த செங்கம் காவல்துறையினர் விவசாயிடம் சமரசம் பேசி கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியர் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்படும் என கூறி சவக்குழியில் இருந்து எழுப்பி அழைத்து சென்றனர்

Tags

Next Story
Weight Loss Tips In Tamil