மகளின் காதல் திருமணத்தில் கலந்து கொள்ளாத மனைவியை கொன்றார் கணவன்

மகளின் காதல் திருமணத்தில் கலந்து கொள்ளாத மனைவியை கொன்றார் கணவன்
X

கொலை செய்யப்பட்ட  ராணி அவரது கணவர் பழனியுடன் உள்ள பழைய படம்.

திருவண்ணாமலை அருகே மகளின் காதல் திருமணத்தில் கலந்து கொள்ளாத மனைவியை கொலை செய்த கணவனை போலீசார் கைது செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டை அடுத்த புதூர் செக்கடி ஊராட்சி ஜம்போடை கிராமத்தை சேர்ந்தவர் பழனி (வயது 47). விவசாயி. இவரது மனைவி ராணி (43). இவர்களுக்கு ராஜபாண்டி (24), சிவா (22) என்று 2 மகன்களும் பரணி (20) என்ற மகளும் உள்ளனர்.

ராணி வெளிநாட்டில் வீட்டு வேலை செய்து பணம் சம்பாதித்து வந்தார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தனது தாய் இறந்ததற்காக சொந்த ஊருக்கு வந்த ராணி பின்பு வெளிநாட்டிற்கு செல்லாமல் சொந்த ஊரிலேயே இருந்துள்ளார்.

இதற்கிடையில், இவர்களது மகள் பரணி புதூரை சேர்ந்த வாலிபரை காதலித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் தந்தை பழனி மற்றும் உறவினர்கள் ஆதரவுடன் அந்த வாலிபரை காதல் திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணம் தாயார் ராணிக்கு பிடிக்காததால் அவர் அதில் கலந்து கொள்ளாமல் வீட்டிலேயே இருந்து விட்டார்.

அதேநேரம் தர்மபுரி மாவட்டம் கோட்டப்பட்டியில் உள்ள ராணியின் சகோதரி வீட்டில் நடந்த விசேஷத்தில் பங்கேற்க தேவையான பொருட்களை தானிப்பாடியில் உள்ள கடைகளில் வாங்கிக் கொண்டு ராணி வீட்டுக்கு வந்தார்.அப்போது கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த பழனி, வீட்டில் வைத்திருந்த கத்தியால் ராணியின் கழுத்தில் வெட்டினார். இதில் பலத்த காயமடைந்த ராணி, ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து பரிதாபமாக இறந்தார்.

அப்போது வெளியே சென்று இருந்த ராணியின் மகன் சிவா வீட்டுக்கு வந்தபோது ரத்த வெள்ளத்தில் தாயார் ராணி இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தானிப்பாடி போலீசாருக்கு அவர் தகவல் தெரிவித்தார். உடனடியாக திருவண்ணாமலை ரூரல் போலீஸ் துணை சூப்பிரண்டு அஸ்வினி, இன்ஸ்பெக்டர் தனலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ராணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்து பக்கத்து கிராமத்தில் தனது அக்கா வீட்டில் பதுங்கி இருந்த ராணியின் கணவர் பழனியை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
தினம் 1 ! வேகவைத்த முட்டை சாப்பிட்டால் உடம்புக்கு அவ்வளவு சத்துக்கள்  கிடைக்கும் ... வேறென்ன வேணும்...! | Egg benefits in tamil