செங்கம் அருகே மனைவியை சுத்தியலால் அடித்து கொலை செய்த கணவன் கைது

செங்கம் அருகே மனைவியை சுத்தியலால் அடித்து  கொலை செய்த கணவன் கைது
X

சரணடைந்த விஜி

மனைவி மீது ஏற்பட்ட சந்தேகத்தால் சுத்தியலால் அடித்துக் கொன்ற கணவனை போலீசார் கைது செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த கரிமலைபாடி கிராமத்தைச் சேர்ந்தவர் விஜி (வயது 34). இவர் கூலிவேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி செல்வி (வயது 30). இவர்களுக்கு திருமணமாகி சுமார் 16 ஆண்டுகள் கடந்த நிலையில் ஒரு மகள் பத்தாம் வகுப்பு பயின்று வருகிறார். ஒரு மகன் ஒன்பதாம் வகுப்பு பயின்று வருகின்றார். இந்நிலையில் விஜிக்கு சொந்தமாக இரண்டு ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தை தன் மனைவி செல்வியின் கண்காணிப்பில் விட்டுவிட்டு திருப்பூர் பகுதிக்கு தனியார் கம்பெனியில் கூலி வேலைக்கு சென்றுள்ளார்.

பின்னர் விஜி கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது மனைவி செல்வியின் நடத்தையில் சந்தேகம் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மனைவி மீது சந்தேகப்பட்டு அடிக்கடி அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மீண்டும் விஜிக்கு மனைவியின் மீது சந்தேகம் எழுந்து வாக்கு வாதத்தில் ஈடுட்டு பின்னர் இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பில் முடிந்துள்ளது.

இந்நிலையில் இரவு தங்கள் ஊரில் நடைபெற்ற கோவில் திருவிழாவிற்கு தங்களது பிள்ளைகளை விஜி அனுப்பி வைத்திருந்தார். அப்போது திடீரென விஜிக்கும் அவரது மனைவி செல்விக்கும் மீண்டும் வாக்குவாதம் நடைபெற்றது. இருவருக்கும் வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த விஜி தனது வீட்டில் இருந்த பெரிய சுத்தியலை எடுத்து மனைவி செல்வியின் தலையில் அடித்துள்ளார். இதில் தலை பிளந்த நிலையில் செல்வி சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். இதை தொடர்ந்து விஜி வீட்டின் கதவை பூட்டி விட்டு மேல் செங்கம் காவல்நிலையத்திற்கு இரவு 2 மணிக்கு சென்று தன் மனைவிமீது ஏற்பட்ட சந்தேகத்தால் அவரை சுத்தியால் அடித்து கொலை செய்துவிட்டதாக சுத்தியலுடன் சரணடைந்தார்.

உடனடியாக மேல்செங்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று செல்வியின் உடலை கைப்பற்றி திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தனது மகளை சந்தேகத்தின் பெயரில் மருமகன் விஜி கொடூரமான முறையில் அடித்து கொலை செய்ததாக தந்தை அளித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்து மேல்செங்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
கடம்பூரில் வெடிபொருட்கள் பதுக்கிய 5 பேரை கைது செய்த போலீஸ்!