சுங்க சாவடியில் அதிக கட்டண வசூல், வாகன உரிமையாளர்கள் முற்றுகை

சுங்க சாவடியில் அதிக கட்டண வசூல், வாகன உரிமையாளர்கள் முற்றுகை
X

சுங்கச்சாவடியை முற்றுகையிட்ட வாகன உரிமையாளர்கள்

செங்கம் அருகே சுங்க சாவடியில் அதிக கட்டணம் வசூலிப்பதை கண்டித்து வாகன உரிமையாளர்கள் முற்றுகையிட்டனர்.

திருவண்ணாமலை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் செங்கம் அருகே கரியமங்கலத்தில் சுங்கச்சாவடி அமைக்க விவசாயிகளும், யாதவ மக்கள் இயக்கமும் கடும் கண்டனம் பொதுமக்களும் தெரிவித்து வந்தனர்.

விவசாய நிலம், விவசாயிகள் நிறைந்தது திருவண்ணாமலை மாவட்டம். தொழில் வளர்ச்சி இல்லாத மாவட்டம். பெங்களூரு, சென்னை போன்ற பெருநகரங்கள் மற்றும் கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்களுக்கு பல ஆயிரம் மக்கள் புலம் பெயர்ந்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகள், நகராட்சி மற்றும் ஊராட்சி சாலைகளை, விவசாய பெருங்குடி மக்கள், 90 சதவீதம் பயன்படுத்தி வருகின்றனர். கரும்பு, நெல், சிறுதானியங்கள், உளுந்து, காய்கனிகள், பூக்கள் உள்ளிட்ட வேளாண் பொருட்களை கொண்டு செல்வதற்காக பயன்படுத்தப்படுகிறது.

அனைத்து வகையான சாலைகளை சீரமைத்து கொடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், சாலைகளை தரமாக சீரமைத்து கொடுப்பதற்கு மாற்றாக, இப்பகுதியில் சுங்கச்சாவடி அமைத்து கடந்த மூன்று வாரங்களுக்கு முன்பு திறக்கப்பட்டது.

முற்றுகை போராட்டம்

இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த கரியமங்கலம் பகுதியில் புதியதாக திறக்கப்பட்ட சுங்கச்சாவடியில் 20 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள வாகனங்களுக்கு சுங்க கட்டண வரி விலக்கு ஏற்படுத்தித் தர வேண்டும் என வாகன உரிமையாளர்கள் சுங்கச்சாவடி அலுவலகத்தில் வாகனங்களை நிறுத்தி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

உள்ளூர் வாகனங்களுக்கும் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் இதனால் உள்ளூர் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்து வந்த நிலையில், 20 கிலோமீட்டர் சுற்றளவில் இருக்கும் அனைத்து வாகனங்களுக்கும் சுங்க கட்டண வரி விலக்கு அளிக்க வேண்டும் என டாட்டா ஏசி வாகன உரிமையாளர்கள் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த செங்கம் காவல் ஆய்வாளர் செல்வராஜ் வாகன உரிமையாளர்களிடம் சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு முறையான ஆவணங்களை சமர்ப்பித்தவுடன் உரிய அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்த பின் வாகன உரிமையாளர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த முற்றுகை போராட்டத்தினால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!