திருவண்ணாமலையில் இடி, மின்னலுடன் பலத்த மழை
சாத்தனூர் அணை.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று பகலில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. தொடர்ந்து மாலை சுமார் 4.30 மணியில் இருந்து இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை சுமார் 2 மணி நேரம் பெய்தது. இதனால் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
அதை தொடர்ந்து மிதமான மழை அதிகாலை வரை நீடித்தது. தொடர்ந்து இரவில் குளிர்ந்த காற்று வீசியது. கீழ்பென்னாத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள ஊர்களில் நேற்று மாலை ஒரு மணி நேரத்திற்கும் மேல் பலத்த மழை பெய்தது.
நேற்று பெய்த மழையில் அதிகபட்சமாக ஜமுனாமரத்தூரில் 59.2 மில்லி மீட்டர் மழையளவு பதிவாகி உள்ளது. மற்ற பகுதிகளில் பெய்த மழையின் அளவு மில்லி மீட்டரில் வருமாறு: திருவண்ணாமலை- 29.1, போளூர்- 16.8, கலசபாக்கம்- 10, செங்கம்- 1.2, சேத்துப்பட்டு- 0.6.
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகிலுள்ள சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அணையின் நீர்மட்டம் 110 அடியை எட்டியுள்ளது. கர்நாடக மாநிலம் மற்றும் தமிழக எல்லையில் தொடர்ந்து பருவமழை பெய்து வருகிறது. இதனால் தென்பெண்ணை ஆற்றில் இருந்து கிருஷ்ணகிரி அணைக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் மொத்த உயரமான 52 அடியில் தற்போது 51 அடி தண்ணீர் நிரம்பியுள்ளது.
இதைத் தொடர்ந்து அணையின் பாதுகாப்பு கருதி தென் பெண்ணையாற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி அணையிலிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர், சாத்தனூர் அணைக்கு வினாடிக்கு நேற்று 2360 கனஅடி வீதம் வந்து கொண்டிருக்கிறது. இதனால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. சில நாட்களாக தண்ணீர் வரத்து இல்லாததால் நீர்மட்டம் உயராமல் இருந்தது. தற்போது வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ளதால் நேற்று முதல் அணைக்கு நீர்வரத்து தொடங்கியது. இதனால் நேற்று மாலை நிலவரப்படி அணை நீர்மட்டம் 110 அடியாக உயர்ந்துள்ளது.
அணையில் தண்ணீர் வரத்து அதிகரித்து இருப்பதால் பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் மூலம் திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் சுமார் 50,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இதனால் பாசன வசதி பெறுகின்ற விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தற்போது தென்பெண்ணை ஆற்று பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் ஆற்றில் யாரும் இறங்கவோ, குளிக்கவோ கூடது என மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu