தண்டராம்பட்டு போலீஸ் ஸ்டேஷனில் புகுந்து ரகளை: பாஜக நிர்வாகி கைது

போதையில் கலாட்டா செய்தவர்களுக்கு ஆதரவாக போலீஸ்நிலையத்தில் புகுந்து தகராறு செய்த பாஜ நிர்வாகி உட்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே தென்முடியனுர் கிராமத்தைச் சேர்ந்த சந்தோஷ் (வயது 30), ராஜா (37) ஆகியோர் நேற்று மாலை அல்லப்பனூர் செல்லும் சாலையில் குடிபோதையில் நின்று கொண்டு அந்த வழியாக வந்த வாகனங்களை வழிமறித்து தகராறு செய்துள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த தண்டராம்பட்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பச்சையப்பன் மற்றும் போலீசார் விரைந்து சென்று 2 பேரையும் கைது செய்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் காவலில் வைத்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் அவர்களின் உறவினரான தென் முடியனூர் கிராமத்தைச் சேர்ந்த பா.ஜ.க. எஸ்.சி. எஸ்.டி. பிரிவு மாவட்ட துணைத் தலைவரும் அம்பேத்கர் சமூகப் புரட்சி படை நிறுவனமான குபேந்திரன் (55) மற்றும் அதே பகுதியை சேர்ந்த ஏழுமலை மனைவி சாந்தி, வெங்கடேசன் மனைவி நிஷாந்தி, தே.மு.தி.க. முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ஏழுமலை, தங்கராஜ், தங்கராஜ் மகன் லோகேஷ், சுந்தர், தங்கராஜ் மனைவி உஷா, முத்துவேல், சத்தியசீலன் மற்றும் சிலர் போலீஸ் நிலையத்திற்குள் அத்துமீறி நுழைந்தனர்.
அங்கு பணியிலிருந்த சப்-இன்ஸ்பெக்டர் பச்சையப்பன் மற்றும் போலீசாரை அவர்கள் தரக்குறைவாக பேசி உள்ளனர். மேலும் கைது செய்யப்பட்ட 2 வாலிபர்களையும் வெளியே விடவில்லை என்றால் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டி உள்ளனர்.
இது குறித்து காவல் உதவி ஆய்வாளர் பச்சையப்பன் அளித்த புகாரின் பேரில் தண்டராம்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து பாஜக நிர்வாகி குபேந்திரன், முத்துவேல், தங்கராஜ், ஏழுமலை மற்றும் பிரகாஷ் ஆகியோரை கைது செய்தனர்.
ஏற்கனவே தென்முடியனுர் ஊரில் இரு தரப்பினருக்கும் பிரச்சனை இருந்து வரும் நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள கைது நடவடிக்கையின் காரணமாக அந்த ஊரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu