சாத்தனூர் அணையின் நீர்மட்டம் உயர்வால் மகிழ்ச்சியில் விவசாயிகள்

சாத்தனூர் அணையின் நீர்மட்டம் உயர்வால்  மகிழ்ச்சியில் விவசாயிகள்
X

சாத்தனூர் அணை.

சாத்தனூர் அணையின் நீர்மட்டம் 112.15 அடியாக உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள சாத்தனூர் அணை, தமிழகத்தில் உள்ள பெரிய அணைகளில் முக்கியமானது.

இந்த அணையின் உயரம் 119 அடியாகும். அணையில் தேக்கப்படும் தண்ணீரின் மொத்த கொள்ளளவு 7ஆயிரத்து 321 மில்லியன் கன அடியாகும். அணையில் தேங்கும் தண்ணீர் மூலம் திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் சுமார் 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

கர்நாடக மாநிலத்தில் இருந்து உருவாகி வரும் இந்த தென்பெண்ணை ஆறு கர்நாடக மாநிலம், ஒசூர், கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூரில் உள்ள கடலில் கடைசியாக கலக்கிறது. தற்போது கடந்த சில நாட்களாக வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கர்நாடக மாநிலம் பெங்களூர் பகுதி மற்றும் தமிழகத்தில் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

விவசாய பாசனத்திற்காக சாத்தனூர் அணையில் இருந்து வலது புறம், இடது புறம் தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் சாத்தனூர் அணை 100 அடியாக நீர்மட்டம் குறைந்தது.

இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த மற்றும் மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் சாத்தனூர் அணையில் நீர்மட்டம் உயரத் தொடங்கியது.

இதில் நேற்று மாலை சாத்தனூர் அணைக்கு ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. இதனால் சாத்தனூர் அணையின் நீர்மட்டம் 112.15 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் அணை கிடுகிடுவென நிரம்பி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் பெய்த மழையின் அளவு

திருவண்ணாமலையில் 63.5 மில்லி மீட்டர் மழை அளவு பதிவாகியுள்ளது. மற்ற பகுதிகளில் பெய்த மழையின் அளவு மில்லி மீட்டரில் வருமாறு:- தண்டராம்பட்டு - 15.6, கீழ்பென்னாத்தூர் - 13, செங்கம் - 10.8, போளூர் - 2.2, வந்தவாசி-15, வெம்பாக்கம்-7.6, செய்யாறு-2., சேத்துப்பட்டு - 1.4 மில்லி மீட்டர் ஆகும்.

திருவண்ணாமலையை அடுத்த மங்கலம் கிராமத்தில் பெய்த மழையினால் வட்டார ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் இருந்த மரம் ஒன்று வேரோடு சாய்ந்தது. இதனை அப்பகுதி மக்கள் அகற்றினர்.

Tags

Next Story