திருவண்ணாமலை சாத்தனூர் அணை நிரம்பி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி

திருவண்ணாமலை சாத்தனூர் அணை நிரம்பி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி

சாத்தனூர் அணை , ( பைல் படம் ) 

தொடர் மழை காரணமாக சாத்தனூர் அணை நிரம்பி வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக சாத்தனூர் அணை நிரம்பி வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள சாத்தனூர் அணை, தமிழகத்தில் உள்ள பெரிய அணைகளில் முக்கியமானது.

இந்த அணையின் உயரம் 119 அடியாகும். அணையில் தேக்கப்படும் தண்ணீரின் மொத்த கொள்ளளவு 7ஆயிரத்து 321 மில்லியன் கன அடியாகும். அணையில் தேங்கும் தண்ணீர் மூலம் திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் சுமார் 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

இதற்காக ஆண்டுதோறும் 90 நாட்களுக்கு பாசனத்திற்காக அணையின் நீர் திறந்து விடப்படுவது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டும் 3 மாதங்கள் இடது மற்றும் வலது புற கால்வாய் மூலம் பாசனத்திற்கு நீர் திறந்து விடப்பட்டது. இதனால் அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து காணப்பட்டது.

இந்த நிலையில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருவதால் சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது இதன் காரணமாக சாத்தனூர் அணையின் நீர்மட்டம் தற்போது 113.15 அடியை எட்டியுள்ளது. அதாவது 6056 மில்லியன் கன அடி நீர் அணையில் தற்போது தேக்கி வைக்கப்பட்டுள்ளது.

மொத்தம் கொள்ளளவில் இது 82.72 சதவீதம் ஆகும். வினாடிக்கு 475 கன அடி நீர் தற்போது அணைக்கு வந்து கொண்டிருக்கிறது சாத்தனூர் அணை பகுதியில் நேற்று இரவு மட்டும் 60 மில்லி மீட்டர் மழை கொட்டி தீர்த்தது. தொடர்ந்து சாத்தனூர் அணை பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது.

இதனால் சாத்தனூர் அணை முழு கொள்ளளவை விரைவில் எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வாணாபுரம்

வாணாபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில தினங்களாக பகல் முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் மாலை மற்றும் இரவு நேரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக நீர்நிலைப்பகுதிகளான ஏரி, குளம், கால்வாய் உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் வேகமாக வருகிறது. இதனால் சில ஏரிகள் அதன் முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வருகிறது.

மேலும் சில ஏரிகளுக்கு தண்ணீர் வர தொடங்கியுள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு தொடர்ந்து பெய்த பலத்த மழை காரணமாக வாணாபுரம், மழுவம்பட்டு, சதாகுப்பம், அகரம்பள்ளிப்பட்டு, குங்கிலியநத்தம், தலையாம்பள்ளம், தச்சம்பட்டு சின்னஏரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஏரிகளுக்கு தண்ணீர் அதிகளவில் வருவதால் ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டி உபரிநீர் வெளியேறி வருகிறது.

இதன் காரணமாக விவசாயிகள் நிலங்களை உழுது பயிரிட தொடங்கி உள்ளனர். மேலும் பருவத்திற்கு ஏற்ற பயிர்களாக நெல் நடவு செய்யும் பணியில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். எதிர்வரும் காலங்கள் மழைக்காலம் இருப்பதாலும் அதற்கு முன்னதாகவே ஏரிகளுக்கு தண்ணீர் வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வெம்பாக்கத்தில் 64 மில்லி மீட்டர் மழை

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று பல்வேறு பகுதிகளில் மிதமான மற்றும் பலத்த மழை பெய்தது. இதில் அதிகபட்சமாக வெம்பாக்கத்தில் 64 மில்லி மீட்டர் மழை அளவு பதிவாகியுள்ளது.

மற்ற பகுதிகளில் பெய்த மழையளவு (மில்லி மீட்டரில்) வருமாறு:- வந்தவாசி-55, சேத்துப்பட்டு-50.6, செய்யாறு-40, ஆரணி-35.4, ஜமுனாமரத்தூர்-29, போளூர்-18.4,கலசபாக்கம்-13.4, கீழ்பென்னாத்தூர்-11, செங்கம்-10.4, திருவண்ணாமலை- 6.3, தண்டராம்பட்டு-4.2. மில்லி மீட்டர் மழை அளவு பதிவாகியுள்ளது.

Tags

Next Story