மீன்பிடிப்பதில் தகராறு; கிராம மக்கள் சாலை மறியல்!

மீன்பிடிப்பதில் தகராறு; கிராம மக்கள் சாலை மறியல்!
X

சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள் 

குப்பநத்தம் அணையில் மீன்பிடிக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே உள்ள குப்பநத்தம் அணையில் கடந்த சில ஆண்டுகளாக மீன்பிடி குத்தகை சாத்தனூர் பகுதியை சேர்ந்த மகளிர் குழுவுக்கு வழங்கப்பட்டு, அதன் மூலம் சாத்தனூர் பகுதியை சேர்ந்த நபர் மீன்பிடித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் மீன்பிடி குத்தகை காலம் முடிந்தும் கூட தொடர்ந்து மீன் பிடித்து வருவதாக கூறி அப்பகுதி மக்கள் மீன்பிடி குத்தகைதாரருக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் மீன்பிடிக்க வந்த நபர்களிடம் அப்பகுதி மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

செங்கத்தை அடுத்த துரிஞ்சி குப்பம் கிராமத்தில் உள்ள குப்பநத்தம் அணையில் மீன் வளர்த்து பிடிப்பதற்கு சாத்தனூர் அணை மகளிர் கூட்டுறவு சங்கத்துக்கு மத்திய பெண்ணையாறு நீர்வள ஆதாரத்துறை மூலம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஒதுக்கப்பட்ட ஐந்து ஆண்டு காலம் முடிந்த நிலையில் கரோனா தொற்று காலத்தில் அணையில் மீன் பிடிக்கவில்லை அதனால் நஷ்டம் ஏற்பட்டதாக கூறி சாத்தனூர் அனைத்து மகளிர் கூட்டுறவு சங்கம் சார்பில் அணையில் மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு மீன் பிடிக்க அனுமதிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது, பின்னர் நீர்வளத்துறை அதிகாரிகள் மூலம் மீண்டும் இரண்டு ஆண்டுகளுக்கு அதற்கான பணத்தை அரசுக்கு செலுத்திய பிறகு அனுமதி வழங்கி கடந்த இரண்டு மாதங்களாக அணையில் மீன் பிடிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே மலை கிராமங்களான கல்லாத்தூர், தொட்டிமடிவு, துரிஞ்சிகுப்பம் கிராமங்களை சேர்ந்த மக்கள் குப்பநத்தம் அணை கட்டுவதற்கு தாங்கள் வீடு நிலங்களை இழந்து உள்ளோம், அதனால் அணையில் மீன் பிடிப்பதற்கு முன்னுரிமை எங்களுக்கு தான் உள்ளது எனக் கோரி அதிகாரிகளிடம் சில மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இதன் பேரில் நடவடிக்கை இல்லாததால் ஆத்திரமடைந்த மூன்று கிராம மக்கள் ஒன்று திரண்டு மீன்பிடிக்க அணைக்குள் இறங்கியவர்களை மீன்பிடிக்க கூடாது என தகராறில் ஈடுபட்டனர்.

மேலும் மீனவர்கள் குடியிருந்த குடிசை வீட்டை தீயிட்டுக் கொளுத்தி செங்கம் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் செங்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர்.

கோட்டாட்சியர் தலைமையில் சமாதான கூட்டம் நடத்தி அணையில் யார் மீன்பிடிப்பது என்பது குறித்து முடிவு செய்யலாம் என போலீசார் தெரிவித்தனர்

அதைத் தொடர்ந்து போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Tags

Next Story
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: பிரசாரம் முடிவுக்கு, நாளை பரபரப்பான வாக்குப்பதிவு..!