செங்கம் அருகே கொதிக்கும் எண்ணெயில் வடை எடுத்த பக்தர்கள்

கொதிக்கும் எண்ணெயில் வடை எடுத்த பக்தர்கள்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே தொரப்பாடி கிராமத்தில் உள்ள ஸ்ரீ பாலசுப்பிரமணியர் கோவிலில் 28 ஆம் ஆண்டு தைப்பூச விழா நேற்று விமர்சையாக நடைபெற்றது. விழாவையொட்டி கடந்த ஏழு நாட்களுக்கு முன் கிராமத்தில் காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பக்தர்கள் காப்பு கட்டிக்கொண்டு தைப்பூச விழாவிற்கு விரதம் இருந்து வந்தனர்.
இந்நிலையில் கோயிலில் தைப்பூச விழாவை ஒட்டி சுவாமிக்கு அதிகாலை முதல் சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து கோயில் வளாகத்தில் பக்தர்கள் செக்கு இழுத்தல், உரல் இழுத்தல், காரை முள் மீது நடந்து செல்வது, கொதிக்கும் எண்ணெயில் வடை எடுத்தல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்று இரவு சிறப்பு அலங்காரத்தில் சுவாமி வான வேடிக்கையுடன் இன்னிசை கச்சேரிகள் முழங்க வீதி உலா நடைபெற்றது.
இவ்விழாவில் கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன், போளூர் சட்டமன்ற உறுப்பினர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர். மேலும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.
மேலும் திருவண்ணாமலை மாவட்டத்தில் அருணாச்சலேஸ்வரர் கோயில் உள்பட மாவட்டத்தின் முக்கிய முருகன் கோயில்களில் நேற்று தைப்பூச விழா கோலாகலமாக நடைபெற்றது.
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் ராஜகோபுரம் நுழைவாயில் பகுதியில் உள்ள ஸ்ரீ கம்பத்து இளையனார் சன்னதியில் தைப்பூசத்தை ஒட்டி அதிகாலை மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றன. தொடர்ந்து பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் பலர் காவடி சுமந்து வந்து கம்பத்து இளையனர் சன்னதியில் நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்.
கீழ்பெண்ணாத்தூர் அடுத்த சோமாசி பாடி கிராமத்தில் வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ முருகன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் தைப்பூசத்தை ஒட்டி சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர் மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு தீப ஆராதனை காண்பிக்கப்பட்டு சிறப்பு அன்னதானங்கள் வழங்கப்பட்டது. நேற்று இரவு 10 மணி வரை பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu