தண்டராம்பட்டு ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகள்: ஆட்சியர் ஆய்வு

தண்டராம்பட்டு ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகள்: ஆட்சியர் ஆய்வு
X

நாராயண குப்பம் ஊராட்சியில் பயிரிடப்பட்ட நறுமண பயிர்களை ஆய்வு செய்து செயல்முறை விளக்கம் மற்றும் தயாரிக்கப்படும் முறையினை மாவட்ட ஆட்சியர் கேட்டறிந்தார்.

தண்டராம்பட்டு ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை திருவண்ணாமலை மாவட்டஆட்சியர் முருகேஷ் ஆய்வு செய்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட நாராயணகுப்பம் ஊராட்சியில் மஞ்சம் புல் (லெமன் கிராஸ்) என்ற தாவரத்தை வளர்த்து அதன் மூலம் சென்ட் தயாரிக்கும் தொழிற்சாலை விவசாயிகளால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த பணிகளை ஆட்சியர் முருகேஷ் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது சென்ட் தொழிற்சாலையில் எவ்வாறு சென்ட் உற்பத்தி செய்யப்படுகிறது என்பது குறித்து கேட்டறிந்தார். மேலும் நாராயணகுப்பம் அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு சரியான முறையில் உணவு வழங்கப்படுகிறதா என்றும், நாராயணகுப்பம் ஊராட்சியில் பராமரிக்கப்படும் வரவு, செலவு கணக்குகள், 100 நாள் வேலை திட்டத்தில் வழங்கக்கூடிய அடையாள அட்டைகள் அதன் மூலம் பராமரிக்கப்படும் கணக்குகளை பார்வையிட்டார். புதிதாக கட்டப்பட்டு வரும் பஞ்சாயத்து அலுவலகத்தை பார்வையிட்ட ஆட்சியர் முருகேஷ், பணிகளை விரைந்து முடிக்குமாறு கூறினார்.

அதைத்தொடர்ந்து சிறுபாக்கம் கிராமத்தில் சொட்டுநீர் பாசன முறையில் கரும்பு பயிரிடப்படுவதை நேரில் ஆய்வு செய்த ஆட்சியர் அந்த கிராமத்தில் புதிய குளம் ஒன்றை அமைப்பதற்கான இடத்தை பார்வையிட்டு அதற்கான பணிகள் குறித்தும் ஆய்வு செய்தார். ஆய்வின் போது தண்டராம்பட்டு ஒன்றியக்குழு தலைவர் பரிமளா கலையரசன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நிர்மலா, மகாதேவன், தாசில்தார் பரிமளா, வேளாண்மை இணை இயக்குனர் முருகன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Tags

Next Story