தீபத் திருவிழா வாகன போக்குவரத்து: மாவட்ட எஸ்பிகள் ஆய்வு

தீபத் திருவிழா வாகன போக்குவரத்து: மாவட்ட எஸ்பிகள் ஆய்வு
X

செங்கத்தில் பேருந்து நிலையம் அருகில் ஆய்வு செய்த மூன்று மாவட்ட எஸ்பிகள்

தீபத் திருவிழா முன்னேற்பாடாக வாகன போக்குவரத்துக்காக சாலைகளை திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூா் மாவட்ட எஸ்பிகள் ஆய்வு செய்தனர்

திருவண்ணாமலை, அருணாச்சலேஸ்வரர் கோயில் தீபத் திருவிழா முன்னேற்பாடாக, வாகனப் போக்குவரத்துக்காக செங்கம் பகுதியில் உள்ள சாலைகளை திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூா் மாவட்ட எஸ்.பி.க்கள் ஆய்வு செய்தனா்.

நீர், நெருப்பு, ஆகாயம், காற்று, நிலம் ஆகிய பஞ்ச பூத ஸ்தலங்களில் நெருப்பு ஸ்தலமாக கருதப்படுவது திருவண்ணாமலை. இங்கு சிவனே மலையாக எழுந்து நிற்பதாக ஐதீகமாக நம்பப்படுகிறது.

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் அன்றாடம் விசேஷம் நடைபெற்றாலும் கூட கார்த்திகை மாதத்தில் நடைபெறும் தீபத்திருநாளும், அதையொட்டி 10ஆம் நாள் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றும் நிகழ்வும் தான் அனைத்திற்கும் சிகரம் வைத்தார் போல் இருக்கும். இந்த மகா தீப தரிசனத்தை காண்பதற்கே லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வருவதுண்டு.

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் இந்த ஆண்டு கார்த்திகை தீபத் திருவிழா டிசம்பர் மாதம் 1 ஆம் தேதி துவங்கி டிசம்பர் மாதம் 17 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

மூலவர் சன்னதி முன்பு உள்ள தங்க கொடிமரத்தில் வரும் டிசம்பர் 4-ம் தேதி கொடியேற்றம் நடைபெற்றதும், 10 நாள் உற்சவம் ஆரம்பமாகும். தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் விழாவின் நிறைவாக டிசம்பர் 13ம் தேதி மகா தீபப்பெருவிழா நடைபெறும். அன்று மாலை கார்த்திகை தீப திருவிழாவின் முக்கிய நிகழ்வாக ‘மலையே மகேசன்’ என போற்றப்படும் 2,668 அடி உயர மலை மீது மகாதீபம் ஏற்றப்படும். ஜோதி வடிவில் அண்ணாமலையார் காட்சி கொடுப்பார். வருடத்திற்கு ஒருமுறை குறிப்பிட்ட சில நிமிடங்கள் மட்டுமே காட்சி தருகின்ற அர்த்தநாரீஸ்வரர், தீப மண்டபத்திற்கு எழுந்தருளி காட்சி தருவார். தொடர்ந்து, 11 நாட்களுக்கு மகா தீப தரிசனத்தை பக்தர்கள் காணலாம்.

இந்நிலையில், தீபத் திருவிழா முன்னேற்பாடாக, வாகனப் போக்குவரத்துக்காக செங்கம் பகுதியில் உள்ள சாலைகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளா்கள் சுதாகா் (திருவண்ணாமலை), கிரண்சுருதி (ராணிப்பேட்டை), ஸ்ரேயாகுப்தா (திருப்பத்தூா்) உள்ளிட்டோா் ஆய்வு செய்தனா்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கடந்த செப்டம்பர் .19-ஆம் தேதி தமிழக துணை முதல்வா் உதயநிதிஸ்டாலின் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

அப்போது, அருணாசலேஸ்வரா் கோயில் தீபத்திருவிழா முன்னேற்பாடுகள் குறித்து அறநிலையத் துறை, காவல் துறை, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா்.

அதன் அடிப்படையில் பெங்களூா், கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டத்தில் இருந்து செங்கம் வழியாக தீபத் திருவிழாவுக்கு வரும் வாகனங்களை செங்கம் பகுதியில் கட்டுப்படுத்தி, சாலையில் வாகன நெருக்கடி மற்றும் விபத்துகளைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா்கள் செங்கம் புதிய பேருந்து நிலையம், பக்கிரிபாளையம் புறவழிச் சாலையை ஆய்வு செய்தனா்.

அப்போது, செங்கம் டிஎஸ்பி மற்றும் காவல் ஆய்வாளா்களுக்கு தீபத்திருவிழாவின் முதல் நாள் வாகனங்களை சாலையில் எந்த வழியாக இயக்குவது என்பது குறித்து தெரிவித்தனா். இதில் செங்கம், மேல்செங்கம், பாய்ச்சல் போலீஸாா் கலந்து கொண்டனா்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!