வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் வாடிக்கையாளர்கள் குறுஞ்செய்தி பெரும் வசதி
பைல் படம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் மொத்தம் 159 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் திருவண்ணாமலை சரகத்தில் 88 சங்கங்களும், செய்யாறு சரகத்தில் 71 சங்கங்களும் செயல்பட்டு வருகிறது. கூட்டுறவு சங்கங்களின் மூலம் விவசாயிகளுக்கு ஓராண்டு வட்டியில்லா பயிர்க்கடன் மற்றும் விவசாய நகைக்கடன் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும் குறைந்த வட்டியில் விவசாயம் அல்லாத நகைக்கடன், தானிய ஈட்டுக்கடன், கால்நடை பராமரிப்பு மூலதன கடன், மாற்றுத்திறனாளிகள் கடன், மகளிர் சுய உதவிக்குழு கடன் போன்ற கடன்களும் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு ஒன்றியத்தில் செயல்பட்டு வரும் வாணாபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் விவசாயிகள் சேமிப்பு கணக்கு தொடங்கி விவசாய கடன் நகை கடன் , விவசாய உபகரணங்களை குறைந்த வாடகைக்கு பெற்று பயன் பெற்று வருகின்றனர்.
இந்த கூட்டுறவு கடன் சங்கத்தில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளை போல் வாடிக்கையாளர்கள் மேற்கொள்ளும் அனைத்து பரிவர்த்தனைகளுக்கும் அவர்களது செல்போனுக்கு குறுஞ்செய்தி பெரும் வசதி திருவண்ணாமலை மாவட்டத்திலேயே முதன் முறையாக இந்த கூட்டுறவு கடன் சங்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருவண்ணாமலை கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைபதிவாளர் ஜி.நடராஜன் கூறியதாவது:-
வாடிக்கையாளர்கள் தங்களது சேமிப்பு கணக்கு பற்று வரவு, கடன் தொகை பட்டுவாடா, உரம் பட்டுவாடா போன்ற அனைத்து கூட்டுறவு சங்க பரிவர்த்தனைகளையும் குறுஞ்செய்தி மூலம் தங்களது செல்போனில் தெரிந்து கொள்ளலாம். மேலும் இச்சங்கத்தில் வைப்புதாரர்களின் நலன் கருதி நிரந்தர வைப்புகளுக்கு வணிக வங்கிகளைவிட கூடுதலாக வட்டி வழங்கப்படுகிறது. மேலும் வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பு பெட்டக வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. சங்கத்தின் அனைத்து கணக்குகளும் கணினி மயமாக்கப்பட்டு, தேசிய மயமாக்கப்பட்ட மற்றும் தனியார் வங்கிகளுக்கு இணையான வாடிக்கையாளர் சேவை அளித்து வருகிறது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களும் கணினி மயமாக்கப்பட்டு, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளுக்கு நிகரான சேவை வழங்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் முதல்முறையாக வாணாபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த குறுஞ்செய்தி பெறும் வசதி விரைவில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து கூட்டுறவு கடன் சங்கங்களிலும் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் மற்றும் பொது மக்கள் தங்களுக்கு தேவையான கடன் உதவிகளை தங்கள் அருகாமையில் உள்ள கூட்டுறவு நிறுவனங்களை அணுகி கடனுதவி பெற்று பயன் அடையலாம்.
பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினர்களாக சேர்ந்து தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளுக்கு இணையான வாடிக்கையாளர் சேவையினை பெற்று பயன்பெறலாம். இவ்வாறு அவர் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu