செங்கம் அருகே கட்டிடத் தொழிலாளி உயிரிழப்பு: உறவினர்கள் சாலை மறியல்
சாலை மறியலில் ஈடுபட்ட உறவினர்கள்
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே கட்டிடத் தொழிலாளி இழப்பிற்கு காரணமானவர்களை கைது செய்ய வலியுறுத்தி திருவண்ணாமலை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த கண்ணக்குருக்கை பகுதியைச் சோ்ந்தவா் கங்காதுரை, இவா் மூன்று தினங்களுக்கு முன்னர் கட்டிட வேலை முடித்து தனது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டிந்தாா்.
அப்போது அதே பகுதியை சேர்ந்த விவசாயிகள் தங்கள் விவசாய நிலத்தில் விளைந்த நெல் மணிகளை திருவண்ணாமலை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஓரத்தில் கொட்டி உளர்த்தி அதன் மீது வாகனம் ஏதும் ஏற்றாமல் இருப்பதற்காக சாலையில் கருங்கல்லை வைத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கங்காதுரை வீடு திரும்பி கொண்டிருந்தபோது இருசக்கர வாகனம் சாலையில் இருந்த கருங்கல் மீது மோதி விபத்துக்குள்ளானதில் கங்காதரன் பலத்த காயம் அடைந்தார்.
பலத்த காயமடைந்த அவரை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னா், தீவிர சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு, கங்காதுரை வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
உறவினர்கள் சாலை மறியல்
இதுகுறித்து, கங்காதுரையின் உறவினா்கள் பாய்ச்சல் காவல் நிலையத்தில் விபத்துக்கு காரணமான விவசாயிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென புகாா் அளித்தனா்.
இந்நிலையில் நேற்று தேசிய நெடுஞ்சாலையில் நெல்லை உலர்த்தி கருங்கல்லை அடுக்கி வைத்த நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து உடனடியாக கைது செய்ய வேண்டும், புகார் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் உயிரிழந்தவரின் உறவினர்கள் திருவண்ணாமலை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த செங்கம் டிஎஸ்பி தேன்மொழிவேல் தலைமையிலான போலீஸாா் நிகழ்விடம் சென்று சாலை மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீஸாா் கூறினா். இதையடுத்து, உறவினா்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனா். இந்த திடீா் மறியலால் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu