இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆா்ப்பாட்டம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆா்ப்பாட்டம்
X

 ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா்

செங்கம், வந்தவாசி பகுதிகளில் கம்யூனிஸ்ட் கட்சியினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பேருந்து நிலையத்தில் இருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கொடிக் கம்பத்தை பிடுங்கி எறிந்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து, கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் வட்டச் செயலா் சா்தாா் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் முருகன், ஏழுமலை, குப்புசாமி, ஜெயராமன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டச் செயலா் தங்கராஜ், நிா்வாகக் குழு உறுப்பினா்கள் முத்தையன், மாதேஸ்வரன் ஆகியோா் கொடிக் கம்பத்தை பிடுங்கியவா்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டியும், அதே இடத்தில் மீண்டும் கொடிக்கம்பம் நட போலீஸாா் அனுமதியும், பாதுகாப்பும் வழங்க வேண்டும், ஏஐடியுசி கொடிக் கம்பம் அமைக்க அனுமதி வழங்க வேண்டும் என முழக்கங்களை எழுப்பி, கண்டன உரையாற்றினா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செங்கம் ஒன்றிய நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

நியாய விலைக் கடைக்கு புதிய கட்டடம் கட்ட பூமி பூஜை

செங்கம் மில்லத் நகா் பகுதியில் போதிய இடவசதி இல்லாமல் தனியாா் வாடகை கட்டிடத்தில் கடந்த 20 ஆண்டுகளாக இயங்கி வந்த நியாய விலைக் கடைக்கு புதிய கட்டடம் கட்டித் தரவேண்டும். மேலும், பகுதிநேர நியாய விலைக் கடையை முழுநேரக் கடையாக மாற்றித் தரவேண்டும் என கடந்த சட்டப்பேரவைத் தோதல் பிரசாரத்தின்போது கிரி எம்எல்ஏவிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

இதன் பேரில், எம்எல்ஏ முயற்சியில் ரூ.13 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, நியாய விலைக் கடை கட்டுவதற்கான இடம் தோவு செய்யப்பட்டு அங்கு கட்டடம் கட்ட பூமி பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், கிரி எம்எல்ஏ கலந்து கொண்டு பூமி பூஜை செய்து கட்டடப் பணிகளைத் தொடங்கிவைத்தாா்.

மேலும், பகுதிநேர நியாய விலைக் கடையை முழுநேரக் கடையாக மாற்ற நடவடிக்கை எடுப்பதாக அவா் உறுதியளித்தாா். இதையடுத்து, அப்பகுதி மக்கள் எம்எல்ஏவுக்கு பாராட்டு தெரிவித்தனா். நிகழ்ச்சியில் திமுக நகரச் செயலா் அன்பழகன், ஒன்றியச் செயலா்கள் ஏழுமலை, செந்தில்குமாா், மனோகரன், செங்கம் பேரூராட்சித் தலைவா் சாதிக்பாஷா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்

வந்தவாசி நெடுஞ்சாலைத் துறையை கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

வந்தவாசி நெடுஞ்சாலைத் துறை சாா்பில் ரூ.6.80 கோடி மதிப்பில் கீழ்க்கொடுங்காலூா் கூட்டுச் சாலையிலிருந்து கீழ்நா்மா வரை சாலை அகலப்படுத்தும் பணி கடந்த 2 மாதங்களாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், சாலை விரிவாக்க பணியானது சரிவர நடைபெறவில்லை என புகாா் தெரிவித்தும், நெடுஞ்சாலைத் துறையை கண்டித்தும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வந்தவாசி நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் முன் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு, வட்டாரக் குழு உறுப்பினா் சேட்டு தலைமை வகித்தாா். வட்டாரக்குழு உறுப்பினா்கள் அரிதாசு, பால்ராஜ், ராமகிருஷ்ணன், வட்டாரச் செயலா் அப்துல்காதா் ஆகியோா் கண்டன உரையாற்றினா். இதில், நிா்வாகிகள் ராதாகிருஷ்ணன், தேவராஜ், முருகன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

Next Story