கள்ளச்சாராயம் இளம் வயது திருமணம் பற்றி தகவல் தெரிந்தால் தகவல் தெரிவிக்க ஆட்சியர் அறிவுறுத்தல்

கள்ளச்சாராயம் இளம் வயது திருமணம் பற்றி தகவல் தெரிந்தால் தகவல் தெரிவிக்க ஆட்சியர் அறிவுறுத்தல்
X

பயனாளிகளுக்கு நல திட்ட உதவிகளை வழங்கிய மாவட்ட ஆட்சியர்

பள்ளி அருகே புகையிலை பொருட்கள் விற்பனை, கள்ளச்சாராய விற்பனை, இளம் வயது திருமணம் பற்றிய தகவல்களை தெரிந்தால் உடனடியாக தெரிவியுங்கள் என ஆட்சியர் கூறினார்

திவண்ணாமலைமாவட்டம் தண்டராம்பட்டு வட்டம் பெருந்துறைப்பட்டு கிராமத்தில் மனுநீதி நாள் திட்ட முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு மாவட்ட ஆட்சியர் பாஸ்கரபாண்டியன் தலைமை தாங்கினார். செங்கம் எம்எல்ஏ கிரி , ஒன்றியக்குழு தலைவர் பரிமளா கலையரசன், கோட்டாட்சியர் மந்தாகினி ஆகியோர் முன்னிலை வகிக்க, தாசில்தார் மோகனராமன் அனைவரையும் வரவேற்றார்.

இவ்விழாவில் பயனாளிகளுக்கு பட்டா மாற்றம், உட்பிரிவு பட்டா மாற்றம், இலவச வீட்டு மனை பட்டா, இருளர் சமூகத்தினருக்கு எஸ்டி சாதிச்சான்றிதழ், இயற்கை மரண உதவித்தொகை மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை முதியோர் உதவித்தொகை திருமண உதவித்தொகை புதிய குடும்ப அட்டை மற்றும் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை வேளாண்மை துறை ஊரக வளர்ச்சித்துறை கூட்டுறவு துறை உள்ளிட்ட 17 துறைகளின் சார்பில் 675 பயனாளிகளுக்கு ரூ.2கோடியே 7 லட்சத்து 23 ஆயிரத்து 616 மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் பாஸ்கரபாண்டியன் வழங்கி பேசுகையில் ,

அரசு மூலம் இதுபோன்ற முகாம்கள் உங்கள் ஊரைத் தேடி நடத்தப்படுகிறது. இந்த முகாமில் இதுபோன்ற முகாம்களை பயன்படுத்திக்கொண்டு பொதுமக்கள் நலத்திட்ட உதவிகளை பெற்றிட வேண்டும்.

அரசு மூலம் என்னென்ன திட்டங்கள் உள்ளது என்பது குறித்தும் தெரிந்துகொள்ள வேண்டும்.

பெண் பிள்ளைகளுக்கு 18 வயதுக்கு கீழ் திருமணம் செய்தால் சட்டப்படி குற்றம். இளம் வயது திருமணம் குறித்து 1098 என்ற எண்ணில் தொடா்பு கொண்டு தகவல்களைத் தெரிவிக்கலாம்.இளம் வயது திருமணத்தை நடத்தினால் திருமணத்துக்கு சென்ற அனைவா் மீதும் காவல்துறை மூலம் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படும்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் இளம்வயது திருமணம் செய்த அனைத்து நபா்கள் மீதும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. குழந்தை திருமணம் நடைபெற்றால் அதில் நீங்கள் பங்கேற்காதீர்கள்.

கள்ளச்சாராயம் குடிக்க வேண்டாம், இதனை அருந்துபவர்கள் கண்பார்வை போய்விடும். மேலும் உங்கள் ஊரில் கள்ளச்சாராயம் விற்றால் தகவல் கொடுங்கள். பள்ளி கல்லூரி அருகில் புகையிலை பொருட்கள் விற்றாலும் தகவல் கொடுங்கள்,

சொத்துபிரச்சனை இருப்பதாக அதிகளவில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் மனுநீதி நாள் முகாம் போன்ற முகாம்களில் மனு கொடுக்கின்றீர்கள். வருவாய்த்துறை மூலம் சொத்துபிரச்சனை குறித்து உடனடி தீர்வு கிடைக்க வாய்ப்பில்லை. எனவே நீதிமன்றங்களை நாடுங்கள் என்றார். மேலும் அவர் பேசுகையில் கல்வித்தொகை வழங்கியதில் தமிழகத்திலேயே திவண்ணாமலை மாவட்டம் முதலிடம் வகிக்கிறது. இந்த முகாம்கள் மூலம் 81 ஆயிரம் மனுக்களைப் பெற்றுள்ளோம்.

குறிப்பாக, பள்ளி மாணவ, மாணவிகளின் ஜாதி சான்றிதழ்களை வழங்குவதற்கான ஒரு சிறப்புத் திட்டமாக இந்த முகாமை மாற்றி ஜாதி சான்றிதழ்களை வழங்கி உள்ளோம். மாவட்ட நிர்வாகம் மூலம் பல்வேறு திட்டங்கள் உடனுக்குடன் செயல்படுத்தப்படுகிறது. மனுக்கள் பெற்று தீர்வு காண்பதிலும் நமது மாவட்டம் முதலிடம் வகிக்கிறது என்றார்.

முகாமில், வட்டாட்சியா் மோகன்ராம், கூட்டுறவு சார் பதிவாளர் மீனாட்சி சுந்தரம், வட்ட வழங்கல் அலுவலர்கள் ,மாவட்ட கல்வி அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அரசுத் துறை அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

Tags

Next Story
கடம்பூரில் வெடிபொருட்கள் பதுக்கிய 5 பேரை கைது செய்த போலீஸ்!