செங்கம் அருகே சாலை விபத்து நடந்த இடத்தில் கலெக்டர், டிஐஜி, எம் எல் ஏ ஆய்வு

விபத்து நடந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே நேற்று முன்தினம் இரவு காரும், அரசு பஸ்சும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன இந்த விபத்தில், காரில் பயணம் செய்த 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 4 பேர் கவலைக்கிடமான நிலையில் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேபோல், சில நாட்களுக்கு முன்பு செங்கம் பக்கிரிபாளையம் பகுதி பைபாஸ் சாலையில், காரும் லாரியும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டன. அந்த விபத்திலும், கார் அப்பளம்போல நொறுங்கியதில் காரில் பயணித்த குழந்தைகள் உள்பட 7 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். அடுத்தடுத்து நடந்த விபத்துகளால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்துள்ளனர்.
இந்நிலையில் விபத்து நடந்த பகுதியில் மாவட்ட கலெக்டர் முருகேஷ், சரக டி ஐ ஜி முத்துசாமி, காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், செங்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கிரி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். விபத்து குறித்து மேல் செங்கம் போலீசாரிடம் விசாரித்தனர். ஏற்கனவே சாலை விபத்துகள் நடந்த இடங்களை பார்வையிட்டனர்.
தொடர்ந்து அய்யம்பாளையம், பெரியபாளையம்பட்டு, சின்னபாளையம்பட்டு, பெரியகுளம், பாய்ச்சல் உள்ளிட்ட பகுதிகள் கிருஷ்ணகிரி மாவட்ட எல்லை வரை சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வில் விபத்து எதனால் ஏற்படுகிறது என்பது குறித்தும், அங்கு விபத்துகள் நடைபெறாமல் இருக்க என்ன நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் ஆலோசனை மேற்கொண்டனர்.
பின்னர் ஆய்வு குறித்து டி.ஐ.ஜி.முத்துசாமி கூறியதாவது,
செங்கம் பகுதியில் உள்ள மெயின் சாலையில் பல்வேறு கிராம சாலைகள் இணைக்கும் பகுதிகள் உள்ளன. அந்தப் பகுதியில் விபத்துகள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் தென்பட்டன. அந்த பகுதிகளில் கூடுதலான வேகத்தடைகள் அமைக்க தெரிவிக்கப்பட்டது.
மேலும் முக்கிய சாலை சந்திப்புகளில் பிளிங்கர்ஸ் ஸ்டிக்கர்ஸ், வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் அணைந்து ஒளிரும் சிகப்பு நிற பிளிங்கர்ஸ் விளக்குகளும் பொருத்தப்படும். வாகன ஓட்டிகளின் வேகத்தை கட்டுப்படுத்துவதற்கு நீண்ட சாலையில் ஆங்காங்கே பேரிகாா்டுகள் வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சாலைகளில் ஒளிரும் விளக்குகள் பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
சிறிய சாலையின் ஓரம் சாலையை மறைக்கும் வகையில் உள்ள செடிகளையும் அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. இதுதவிர சில இடங்களில் பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யவும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. என டி ஐ ஜி தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது போக்குவரத்து கழக அதிகாரிகள், மற்றும் பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu