எதிர்காலம் வளமாக பெண் குழந்தைகளை படிக்க வையுங்கள் : ஆட்சியர் அறிவுரை..!
மக்களுடன் முதல்வர் முகாமில் மருத்துவக்காப்பீடு சான்றிதழ்களை பயனாளிகளுக்கு வழங்கிய மாவட்ட ஆட்சியர்
மக்களுடன் முதல்வர் முகாமில் 1898 மனுக்கள் பெறப்பட்டன, பெறப்பட்ட மனுக்கள் மீது தீர்வு காண மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார். திருவண்ணாமலை மற்றும் தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியங்களில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் நடைபெறுவதை மாவட்ட ஆட்சித்தலைவர் பாஸ்கர பாண்டியன், பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிகழ்வில் மாநில தடகளச் சங்க துணைத்தலைவர் மரு. எ.வ.வே. கம்பன் உடனிருந்தனர்.
மக்களுடன் முதல்வர் முகமானது திருவண்ணாமலை , துரிஞ்சாபுரம், கீழ்பென்னாத்தூர் , தண்டராம்பட்டு, செங்கம் ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள ஊராட்சிகளைச் சேர்ந்த மக்களிடமிருந்து மனுக்களை பெற்றனர். இம்முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் பேசியதாவது,
அரசின் சேவைகள் அனைத்தும் பொதுமக்களை விரைவாகவும், எளிதாகவும் சென்று சேர்ந்திட மக்களுடன் முதல்வர் முகாம் என்ற திட்டம் முதற்கட்டமாக மாநகராட்சி, நகராட்சி மற்றும் நகராட்சியை ஒட்டியுள்ள ஊராட்சிகளில் நடத்தப்பட்டு அனைத்து மனுக்களுக்கும் தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட வருகிறது. மேலும், ஊரகப் பகுதிகளில் உள்ள மக்களுக்கும் அரசின் சேவைகள் சென்று சேரும் வகையில், இம்முகாமில் அரசின் 15 துறைகளைச் சார்ந்த 44 சேவைகளின் கீழ் பெறப்படும் கோரிக்கை மனுக்கள் ஒரே இடத்தில் சம்பந்தப்பட்ட துறைகளை ஒருங்கிணைத்து மனுக்களுக்கு தீர்வு காண இந்த சிறப்பு திட்ட முகாம் நடைபெற்று வருகிறது.
குறிப்பாக, குழந்தை திருமணங்கள் செய்வதை தவிர்க்க வேண்டும். தாய்மார்கள் தங்கள் பெண்குழந்தைகளை கல்லூரி படிப்பு வரை கட்டாயமாக படிக்கவைக்க வேண்டும். முக்கிய காரணம் 18 வயதிற்கு கீழ் பெண் குழந்தைகளை திருமணம் செய்து கொடுக்கின்ற பொழுது, அவர்கள் உடலும் உள்ளமும் வளமாக இல்லாத காரணத்தினால் அவர்களுக்கு பிறக்க கூடிய குழந்தைகள் ஊனமுற்றும், ஊக்கமான குழந்தைகள் பிறப்பதில்லை என்பதை பொதுமக்கள் தெரிந்துகொள்ளவேண்டும். மேலும், குழந்தை திருமணம் தொடர்பான தகவல்களை 1098 என்ற கட்டணமில்லா எண்ணை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். அதேபோன்று எதிர்கால சந்ததியினர் வளமாக இருப்பதற்கு பெண் குழந்தைகள் படித்தால் மட்டுமே சிறப்பாக இருக்கும். உதாரணத்திற்கு எனது அம்மா கல்வி அறிவு பெற்றதினால் என்னை படிக்க வைத்து மாவட்ட ஆட்சித்தலைவராக உருவாக்கியுள்ளார்.
மேலும் தமிழ்நாடு முதலமைச்சர் பெண் குழந்தைகளின் கல்வியை ஊக்கப்படுத்தும் விதத்தில் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் கல்லூரி பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூபாய் ஆயிரம் வழங்க ஏதுவாக செய்துள்ளதை பயன்படுத்தி கட்டாயமாக ஒவ்வொரு தாய்மார்களும் தங்கள் பெண் குழந்தைகளை கல்லூரி படிப்பு வரை படிக்க வைப்பதை உறுதி ஏற்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.
தொடர்ந்து தலையாம்பள்ளம் ஊராட்சியில் நடைபெற்ற முகாமில் மனு அளித்த பயனாளிகளுக்கு 6 நபருக்கு பட்டா மாறுதலுக்கான ஆணையினையும், 1 நபருக்கு வகுப்புச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், 2 நபருக்கு மின் இணைப்பு பெயர் மாற்றத்திற்கான சான்றிதழ்களையும் உடனடி தீர்வு காணப்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் வழங்கப்பட்டது.
மேலும் திருவண்ணாமலை மாவட்டத்தில் 5 இடங்களில் இச்சிறப்பு முகாம்கள் நடைபெற்றன. இதில் மக்களுடன் முதல்வர் ஊரகப்பகுதி (எம்எம்ஆர்) மூலம் 1135 மனுக்களும், மக்களுடன் முதல்வர் முகாம் (எம்எம்சிஆர்) மூலம் 763 மனுக்கள் என மொத்தம் 1898 மனுக்கள் பெறப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, திருவண்ணாமலை ஒன்றியக்குழு தலைவர் கலைவாணி கலைமணி, தண்டராம்பட்டு ஒன்றியக்குழு தலைவர் பரிமளா கலையரசன் மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu