மின் வேலியில் சிக்கி விவசாயி உயிரிழப்பு
செங்கம் அருகே மின் வேலியில் சிக்கி விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த, பீமானந்தல்புதூர் பகுதியில் பன்னீர்செல்வம் என்பதற்கு சொந்தமான விவசாய நிலத்தை தண்டராம்பட்டு தாலுக்கா பண்டிதப்பட்டு பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவர் குத்தகைக்கு நிலம் எடுத்து விவசாயம் செய்து வந்தார்.
விவசாய நிலத்தை ஒட்டி வனப்பகுதி இருப்பதால் இரவு நேரங்களில் காட்டுப்பன்றி. மான். முயல். மயில் உள்ளிட்ட வனவிலங்குகள் விவசாய நிலத்திற்குள் நுழைந்து மணிலா பயிரிட்டதை சேதப்படுத்தி வந்துள்ளன. இந்நிலையில் இதை தடுக்க எண்ணி சட்டவிரோதமாக மோட்டார் பம்புசெட்டில் இருந்து மின்சாரம் எடுத்து நிலத்து முழுவதும் மின்வேலி அமைத்துள்ளார். ராஜா பயிர் செய்து வரும் நிலத்திற்கு பக்கத்து நிலத்துக்காரரான ராமசாமி என்பவர் நேற்று முன்தினம் இரவு சுமார் 10 மணிக்கு தனது விவசாய நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்ச செல்லும் பொழுது மின்சார வேலியில் சிக்கி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்துள்ளார்.
பின்னர் சத்தம் கேட்டு மின் வேலியில் பாச்சிய, மின்சாரத்தை துண்டித்து விட்டு அங்கு வந்து பார்த்த ராஜா, ராமசாமி உயிரிழந்த நிலையில் இருப்பதை கண்டு, சம்பவத்தை மூடி மறைப்பதற்காக ராமசாமி உடலை அருகில் இருந்த பீமானந்தல்புதூர் பகுதியைச் சேர்ந்த சின்னதுரை என்பவரின் விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில் ராஜா வீசி சென்று உள்ளார்.
ராமசாமியி ன் உறவினர்கள் இரவு விவசாய நிலத்தில் தண்ணீர் பாய்ச்ச சென்ற ராமசாமி நேற்று பிற்பகல் வரை வீடு திரும்பவில்லை என அக்கம் பக்கத்தில் தேடிப் பார்த்தனர். பின்னர் விவசாய நிலத்திற்கு சென்று பார்த்த பொழுது அங்கும் இல்லாத நிலையில், தேடி பார்த்தபோது சின்னதுரை கிணற்றில் விழுந்து இறந்த நிலையில் இருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பாச்சல் காவல் துறையினர் கிணற்றில் உள்ள ராமசாமியை மீட்டு பார்த்த பொழுது ராமசாமி முகம் முழுவதும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மேலும் முதுகுப் பகுதி கை கால் உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரம் தாக்கி சிதை முழுவதும் கருகிப் போய் உள்ளது தெரியவந்தது.
இததைனயடுத்து காவல்துறையினர் இரவு நேரங்களில் விவசாய நிலங்களில் மின்சார வேலிகள் அமைப்பவர்கள் யார் என விசாரணை செய்த பொழுது ராஜா சட்டவிரோதமாக இரும்பு கம்பிகள் மூலம் மின்வெளி அமைக்கப்பட்டது தெரியவந்தது . இததைனயடுத்து ராஜாவை கைது செய்து சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பொதுமக்கள் கோரிக்கை
செங்கம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வனப்பகுதி ஒட்டி உள்ள கிராம பகுதிகளில், இது போன்று வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காகவும், வனவிலங்குகள் தண்ணீர் தேடி விவசாய நிலங்களுக்கு வருவதைதடுக்க விவசாயிகள் வனவிலங்குகள் வரும் பாதையை அறிந்து மின் வேலிகள் அமைத்து வன விலங்குகளை வேட்டையாடுவது மற்றும் வனவிலங்குகள் விவசாய நிலங்களில் உள்ள தண்ணீர் தொட்டிகளில் விஷம் கலந்த தண்ணீர் கொடுத்து வேட்டையாடுவது போன்ற சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. இதனை அறியாத பாமர விவசாயிகள் மின் வேலியில் சிக்கி பலியாவதும், விஷம் கலந்து தண்ணீர் குடித்து பலியாவதும் போன்ற சம்பவங்கள் அரங்கேறி வருவது வாடிக்கையாக உள்ளது.
வனத்துறை மற்றும் மின்சாரத்துறை வனப்பகுதி ஒட்டி உள்ள விவசாயிகளுக்கும் பொது மக்களுக்கும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவது குற்ற செயல் என விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கைவைத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu