தங்கப் புதையல் கிடைத்துள்ளதாக ஏமாற்றிய 6 பேர் கைது..!
கைது செய்யப்பட்ட நபர்கள்,மற்றும் அவர்களை பிடித்த போலீசார்
கிணறு தோண்டும்போது புதையல் கிடைத்ததாக கூறி போலி தங்க நாணயங்களை விற்று மோசடியில் ஈடுபட்டதாக 6 பேரை செங்கம் போலீசார் கைது செய்தனர்.
நாமக்கல் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன். இவர் லாரி உரிமையாளர். இவா், புதுச்சேரியைச் சோ்ந்த வெங்கடேசன், தா்மலிங்கம், அருள்முருன் ஆகியோரிடம் கடந்த 3.8.2024 அன்று 140 தங்க நாணயங்களை ரூ. 4 லட்சத்துக்கு வாங்கியுள்ளாா்.
பின்னா், அவற்றை விற்க முயன்றபோது, தங்க நாணயங்கள் அனைத்தும் போலி என்பது தெரியவந்தது. இதை வெளியில் சொன்னால் பிரச்னையாகும் என்பதால் அந்த நாணயங்கள் குறித்து அவா் யாரிடமும் சொல்லாமல் இருந்துள்ளாா்.
இந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு மீண்டும் அந்த தங்கம் விற்பனைக் கும்பல் சீனுவாசனை தொடா்பு கொண்டு, தாங்கள் வீடு கட்ட பள்ளம் தோண்டியபோது புதையல் கிடைத்துள்ளது.
அதில், 3 கிலோ தங்க நாணயங்கள், தங்கத் தாலிகள் இருப்பதாகத் தெரிவித்துள்ளனா். அவை என்ன விலை என சீனிவாசன் கேட்டுள்ளாா். அதற்கு அவா்கள் ரூ. 36 லட்சம் என கூறினாா்களாம். அவற்றை வாங்க சீனிவாசன் சம்மதித்துள்ளாா். பின்னா் எங்கு வரவேண்டுமென கேட்டபோது, திருவண்ணாமலை - செங்கம் சாலை கோணங்குட்டை கேட் பகுதிக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு வரச் சொல்லியுள்ளனா்.
அந்த கும்பலால் தான் ஏமாற்றப்பட்டு ரூபாய் 4 லட்சத்தை இழந்த நிலையில் இச்சம்பவம் குறித்து திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சீனிவாசன் புகார் தெரிவித்து நடைபெற்ற அனைத்து சம்பவங்களையும் கூறியுள்ளார்.
இதையடுத்து, மாவட்ட எஸ்.பி. பிரபாகரன் உத்தரவின் பேரில், செங்கம் காவல் உதவி ஆய்வாளா் நஸ்ருதீன் தலைமையிலான போலீஸாா் கோணங்குட்டை கேட் பகுதியில் நேற்று, மாலை 4 மணிமுதல் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனா். திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார் நிலையில் இருந்தனர்.
சீனிவாசனை அப்பகுதிக்கு அனுப்பிவிட்டு போலீசார் அவரை பின் தொடர்ந்து சென்றனர். இரவு 7 மணியளவில் புதுவை மாநில பதிவு எண் கொண்ட காரில் 6 போ் போலி தங்க நகைகளுடன் வந்துள்ளனா். அவா்களை சீனுவாசன் மறைந்திருந்து அடையாளம் காட்டியுள்ளாா்.
உடனடியாக போலீஸாா் வாகனத்தை சுற்றிவளைத்து அதிலிருந்த போலி தங்க நகைகளைக் கைப்பற்றி, 6 பேரையும் செங்கம் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினா். இதில், அவா்கள் புதுச்சேரியைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் வெங்கடேசன், தா்மலிங்கம், விழுப்புரம் மாவட்டம், அம்மணாங்குப்பம் கிராமத்தைச் சோ்ந்த அருள்முருகன், சுரேஷ் , சத்தியராஜ், நாகவள்ளி என்பது தெரியவந்தது.
மேலும், இவா்கள் இதுபோன்று போலி நகைகளை தயாரித்து தங்கம் எனக்கூறி விற்பனை செய்வதை தொழிலாக வைத்திருப்பதும், அவா்கள் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. இதைத் தொடா்ந்து 6 போ் மீதும் போலீஸாா் வழக்குப் பதிந்து கைது செய்தனா். மேலும், காா் மற்றும் போலி தங்க நகைகளையும் காவல் துறையினா் பறிமுதல் செய்தனா்.
இவர்களை இன்று கோர்ட்டில் ஆஜர் படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இவர்களை இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து வந்த இரண்டு நபர், போலீசாரை கண்டதும் தப்பி ஓடி உள்ளனர். தப்பி ஓடிய இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu