தென்பெண்ணை ஆற்றில் ஆடிப்பெருக்கு விழா கொண்டாட மாட்டு வண்டி பயணம்

தென்பெண்ணை ஆற்றில் ஆடிப்பெருக்கு விழா கொண்டாட மாட்டு வண்டி பயணம்
X

ஆடிப்பெருக்கு விழா கொண்டாடுவதற்காக பழைமை மாறாத மாட்டுவண்டி பயணத்தை மேற்கொண்ட கிராம மக்கள்.

தென்பெண்ணை ஆற்றின் கரையில் ஆடிப்பெருக்கு விழா கொண்டாடுவதற்காக கிராம மக்கள் மாட்டு வண்டி பயணம் மேற்கொண்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே உள்ள நீப்பத்துறை கிராமத்தில் தென்பெண்ணை ஆற்றின் கரையில் ஸ்ரீஅலமேலுமங்கை, பத்மாவதி சமேத ஸ்ரீபிரசன்ன வெங்கட்டரமண பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலின் வரலாறு சார்ந்த பெருமாளின் தங்கையாக ஆற்றின் நடுவில் சென்னம்மாள் பாறை உள்ளது. இந்தக் கோவிலில் இன்று ஆடிப்பெருக்கு திருவிழா நடைபெற்றது.

விழாவில் திருவண்ணாமலை, தருமபுரி, சேலம் மாவட்டங்களிலிருந்தும், சென்னை, பெங்களூரு போன்ற பெருநகரங்களிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்கள் பொங்கலிட்டு குழந்தைகளுக்கு மொட்டை அடித்து, காதணிவிழா நடத்தியும் வழிபட்டனர்.

புதுமண தம்பதியினர் புது தாலி கயிறு மாற்றுதல், சென்னம்மாள் பாறையில் மஞ்சள், சிவப்பு, பொறி கடலை, கருமணி வளையல் போன்றவை வைத்து பச்சை போடுதல் போன்ற பல்வேறு பிராத்தனைகள் செய்து வழிபட்டனர்.

திருவண்ணாமலை, போளூர், ஊத்தங்கரை, செங்கம், சிங்காரப்பேட்டை, அரூர் நகரங்களிலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.பத்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. பக்தர்களுக்கு தேவையான குடிநீர் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

பழைமை மாறாத மாட்டுவண்டி பயணம்

சென்னியம்மன் கோயில் ஆடிப்பெருக்கு விழாவுக்காக, செங்கம் பகுதி கிராம மக்கள் பழைமை மாறாமல் மாட்டுவண்டிப் பயணத்தை மேற்கொள்கின்றனா்.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் இருந்து 35 கி.மீ.தொலைவில் செய்யாற்றின் கரையோரம் நீப்பத்துறையில் சென்னியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் ஆடி மாதம் 18-ஆம் தேதி ஆடிப்பெருக்கு விழா வெகு விமரிசையாக நடைபெறும். விழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், அண்டை மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று ஆற்றில் புனிதநீராடி, பொங்கல் வைத்து நேர்த்திக் கடன் செலுத்தி வழிபடுவா்.

பக்தா்களின் வசதிக்காக, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். செங்கம் அருகேயுள்ள புதுப்பட்டு, ஆலப்புத்தூா் கிராமங்களில் இருந்து பக்தா்கள் மாட்டுவண்டிகளில் உறவினா்களை அழைத்துக் கொண்டு, சமையல் பாத்திரங்கள், மளிகைப் பொருள்கள், நோத்திக் கடனுக்கான ஆடு, கோழிகளை வண்டிகளில் ஏற்றிச் சென்று, பொங்கல் வைத்து, நேர்த்திக் கடன் செலுத்தி வழிபட்டுவிட்டு மறுநாள் மாட்டுவண்டியை பூட்டிக்கொண்டு ஊா் திரும்புவாா்கள். கிராம மக்களின் இந்த மாட்டுவண்டிப் பயணம் கடந்த 50 ஆண்டுகளாக தொடா்கிறது.

இந்த நிலையில், இன்று நடைபெறும் ஆடிப்பெருக்கு விழா நிகழ்ச்சிக்கு நேற்று காலை உறவினா்களுடன் மாட்டுவண்டிப் பயணத்தை தொடங்கிய புதுப்பட்டு, ஆலபுத்தூா் கிராம மக்கள் இன்று ஆடிப்பெருக்கு விழாவினை தென்பெண்ணை ஆற்றில் சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்து, நாளை அதே மாட்டு வண்டி பயணத்தில் தங்களது ஊருக்கு திரும்புவர்.

Tags

Next Story