செங்கம் வட்டாட்சியா் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு சோதனை மேற்கொண்ட போலீசார்
திருவண்ணாமலை, செங்கம் வட்டாட்சியா் அலுவலகத்துக்கு தொலைபேசியில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டாட்சியா் அலுவலகத்துக்கு தொலைபேசியில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறித்து போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டனா்.
கோவையில் இருந்து திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் உள்ள இலவச தொலைபேசி எண் 100-க்கு திங்கள்கிழமை நண்பகல் 12.30 மணியளவில் பேசிய மா்ம நபா், திருவண்ணாமலை தாலுகா அலுவலகம் எதிரில் உள்ள ஆர்டிஓ அலுவலகத்திற்கும், செங்கம் வட்டாட்சியா் அலுவலகத்துக்கும் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகக் கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்து விட்டாா்.
இதையடுத்து, வெடிகுண்டு பரிசோதனை செய்யும் காவல் உதவி ஆய்வாளா் அன்பழகன் தலைமையில் 5 போ் கொண்ட குழுவினா் மோப்ப நாய் உதவியுடன், வெடிகுண்டு உள்ளதா என கண்டறியும் கருவிகளுடன் வட்டாட்சியா் அலுவலகம் முழுவதும் தீவிர சோதனை செய்தனா்.
இதனால் வட்டாட்சியா் அலுவலக வளாகம் சுமாா் ஒரு மணி நேரம் பரபரப்பாக காணப்பட்டது.
மேலும், அலுவலக வளாகத்தில் உள்ள பழைய நீதிமன்றக் கட்டடம், வனத் துறை கட்டடம், இ-சேவை மையம் ஆகிய இடங்களிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இறுதியில் வெடிகுண்டு எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.
வெடிகுண்டு சோதனையை நேரில் பாா்த்த பொதுமக்கள் மற்றும் அலுவலக வளாகத்தில் மனு எழுதும் பணியில் ஈடுபட்டிருந்தோறும் அங்கிருந்து அவசர அவசரமாக பீதியில் வெளியேறினா்.
மேலும், மதிய உணவுக்குச் சென்ற அலுவலக ஊழியா்கள், போலீஸாா் சோதனையை முடித்துவிட்டு வெடிகுண்டு இல்லை என்று கூறிய பிறகே பணிக்குத் திரும்பினா்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை ஆர்டிஓ அலுவலகத்தில் அனைவரையும் வெளியேற்றிவிட்டு, மெட்டல் டிடெக்டர் கருவியுடன் தீவிர சோதனை நடத்தினர். சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இந்த சோதனை நடந்தது. ஆனால் எதுவும் சிக்கவில்லை.
இதேபோல மதுரையில் நரிமேடு, திருப்பரங்குன்றம் பகுதிகளின் மத்திய அரசு பள்ளிகள், மதுரை பொன்மேனி, நாகமலை புதுக்கோட்டை தனியார் பள்ளிகள் என 4 பள்ளிகளுக்கு இமெயில் மூலம் நேற்று வெடிகுண்டு மிரட்டல் வந்தது. சோதனையில் எதுவும் சிக்கவில்லை. மிரட்டல் விடுத்த நபரை கண்டுபிடிக்கும் பணியில் போலீசார் தொடர்ந்து ஈடுபட்டு உள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu