வேட்டைக்கு சென்ற நபர் சடலமாக மீட்பு

வேட்டைக்கு சென்ற நபர் சடலமாக மீட்பு
X
ஜவ்வாது மலை அருகே வன விலங்குகளை வேட்டையாட சென்ற பாஜ நிர்வாகி சடலமாக மீட்கப்பட்டார்

ஜவ்வாது மலை வனப்பகுதியில் 9 பேருடன் வன விலங்குகளை வேட்டையாட சென்ற நிலையில் பாஜ நிர்வாகியை சுட்டுக்கொன்று சடலத்தை தீ வைத்து எரித்து சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தலைமறைவான 8 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த ஜவ்வாதுமலை அடிவாரம் கோவில் கொள்ளை கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் மகன் ஏழுமலை,

இவர் பாஜ தகவல் தொழில்நுட்ப பிரிவில் நிர்வாகியாக இருந்தார். இவரும் அதே பகுதியை சேர்ந்த நண்பர்களான காசி, ஜெயராமன் உட்பட 8 பேரும் சேர்ந்து வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக கடந்த 8ம் தேதி இரவு அருகில் உள்ள ஜவ்வாதுமலை வனப்பகுதிக்கு சென்றுள்ளனர்.

மறுநாள் இரவு 9 மணியளவில் ஏழுமலை தனது மனைவி மற்றும் பெற்றோருடன் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அதன் பிறகு ஏழுமலையிடம் இருந்து எந்த தகவலும் இல்லை. அவருடன் சென்ற மற்றவர்களும் ஊருக்குள் வராமல் இருந்ததால் ஏழுமலை குடும்பத்தினர் சந்தேகம் அடைந்தனர். இதையடுத்து, ஏழுமலையின் தந்தை கோவிந்தசாமி செங்கம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் காவல் ஆய்வாளர் செல்வராஜ் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினார். தொடர்ந்து, வனப்பகுதிக்குள் மாயமான ஏழுமலை உட்பட 9 பேரையும் தனிப்படை போலீசாருடன் தேடும் பணியில் ஈடுபட்டனர்.

மேலும், வனத்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்களும் ஒருபுறம் தேடும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து, மோப்பநாய் வரவழைக்கப்பட்டு வனப்பகுதியில் தீவிரமாக தேடுதல் நடைபெற்று வந்தது.

வனத்துறை மற்றும் காவல்துறையினருடன் அந்த கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் ஏழுமலையின் உறவினர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் அந்த வனப்பகுதியில் மாயமானவர்களை தேடி வந்தனர்.

இந்நிலையில் நேற்று மாலை திருப்பத்தூர் வனப்பகுதியை ஒட்டிய மீன்மடுவு என்ற பகுதியில் துர்நாற்றம் வீசியது. கிராம மக்கள் அருகில் சென்றபோது மாயமான ஏழுமலை சடலமாக கிடந்தது தெரியவந்தது.

இதில் சடலம் சிறிது எரிந்துள்ளது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனடியாக வனச்சரக அலுவலகத்திற்கும், காவல்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அதிகாரிகள் ஏழுமலையின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்.

அவரது சடலத்தை தீயிட்டு எரித்தவர்கள் யார்? இந்த சம்பவத்தில் உடன் சென்ற நண்பர்களுக்கு தொடர்பு உள்ளதா? அவர்கள் என்ன ஆனார்கள்? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், மாயமான 8 பேரையும் போலீசாரும் வனத்துறையினரும் இணைந்து வனப்பகுதியில் தீவிரமாக தேடிவருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story